#TokyoOlympics ஹாக்கியில் கலைந்தது இந்தியாவின் தங்க கனவு..! அரையிறுதியில் பெல்ஜியத்திடம் தோல்வி

By karthikeyan VFirst Published Aug 3, 2021, 9:09 AM IST
Highlights

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதியில் பெல்ஜியத்திடம் 5-2 என்ற கோல் கணக்கில் தோற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது இந்திய அணி.
 

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாக்கியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய 2 அணிகளுமே சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறின. காலிறுதியில் பிரிட்டனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஹாக்கி அணி, அரையிறுதியில் இன்று பெல்ஜியத்தை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் பெல்ஜியம் அணி முதல் கோலை அடிக்க, இந்தியாவிற்கு ஹர்மன்ப்ரீத் சிங் முதல் கோலை அடித்து கொடுத்தார். இதையடுத்து மந்தீப் ஒரு கோல் அடிக்க, இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. அதன்பின்னர் கோலுக்காக கடுமையாக போராடிய பெல்ஜியம் அணிக்கு அலெக்ஸாண்டர் ஹென்ரிக்ஸ் 2வது கோலை அடித்து கொடுத்தார். 

அதன்பின்னர் பெனால்டி வாய்ப்பில் பெல்ஜியத்திற்கு மேலும் ஒரு கோல் கிடைத்தது. இதையடுத்து கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அலெக்ஸாண்டர் ஹென்ரிக்ஸ் மேலும் ஒரு கோல் அடித்தார். 4-2 என பெல்ஜியம் முன்னிலை பெற்று வெற்றியை நெருங்கிய நிலையில், கடைசி சில நிமிடங்கள் மட்டுமே எஞ்சியிருந்தது. 

அதனால் கோல் கீப்பரை அனுப்பிவிட்டு, கோல் அடிக்கும் முயற்சியில் கூடுதலாக ஒரு வீரரை களமிறக்கி ஆடிய இந்திய அணிக்கு அப்போதும் பலன் கிடைகக்வில்லை. ஆனால் கோல் கீப்பர் இல்லாததை பயன்படுத்தி கடைசி நிமிடத்தில் 5வது கோலை அடித்த பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அரையிறுதியில் தோற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த இந்திய அணியின் தங்கம் வெல்லும் கனவு தகர்ந்தது. ஆனால் வெண்கலத்திற்கான  வாய்ப்பு உள்ளது. ஆடவர் ஹாக்கி அடுத்த அரையிறுதியில் ஆஸ்திரேலியாவும் ஜெர்மனியும் மோதுகின்றன. அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோற்கும் அணியுடன் இந்தியா வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் மோதும்.
 

click me!