ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்த இந்தியா!! ஆஸி.,யின் மானத்தை காப்பாற்றிய மழை

By karthikeyan VFirst Published Jan 7, 2019, 10:08 AM IST
Highlights

ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி. 
 

ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தொடங்கியது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இரண்டில் இந்திய அணியும் ஒன்றில் ஆஸ்திரேலிய அணியும் வென்றிருந்தது. 2-1 என்ற முன்னிலையுடன் கடைசி போட்டியில் தொடரை வெல்லும் நம்பிக்கையுடன் களமிறங்கியது இந்திய அணி. 

சிட்னியில் நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, புஜாரா, ரிஷப் பண்ட்டின் சதங்கள் மற்றும் மயன்க், ஜடேஜா ஆகியோரின் சிறப்பான அரைசதங்கள் ஆகியவற்றால் 622 ரன்களை குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜாவின் சுழலில் சிக்கி 300 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. ஃபாலோ ஆன் பெற்றதால் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது ஆஸ்திரேலிய அணி. ஆஸ்திரேலிய அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருந்தது. 

ஆட்டத்தின் கடைசி நாளான இன்று, காலை முதல் சிட்னியில் மழை தொடர்ந்து பெய்துவருவதால் போட்டி டிரா என்று அறிவிக்கப்பட்டது. மழை பெய்யவில்லை என்றால் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அருமையாக இருந்தது. போட்டி முழுவதும் நடந்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-1 என வென்றிருக்கும். ஆனால் சிட்னி போட்டி டிரா என்று அறிவிக்கப்பட்டதால் 2-1 என இந்திய அணி  தொடரை வென்றது. 

ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரலாற்றுச்சாதனை படைத்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் அடைந்து வந்த தொடர் தோல்விக்கு இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

click me!