
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் தொடக்கத்தில் தடுமாறினாலும் இறுதியில் 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது இந்தியா.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் சென்னையில் நேற்றுநடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் அஜிங்க்ய ரஹானே, மணீஷ் பாண்டே சேர்க்கப்பட்டனர்.
ஆஸ்திரேலிய அணியில் ஹில்டன் கார்ட்ரைட் சேர்க்கப்பட்டார்.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து அஜிங்க்ய ரஹானேவும், ரோஹித் சர்மாவும் இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கினர்.
பேட் கம்மின்ஸ், நாதன் கோல்ட்டர் நீல் ஆகியோர் அசத்தலாக பந்துவீச, ரோஹித்தும், ரஹானேவும் நிதானமாக ஆடினர். 4-வது ஓவரை வீசிய கோல்ட்டர் நீல், ரஹானேவை வீழ்த்தினார்.
இதயைடுத்து 6-வது ஓவரை வீசிய கோல்ட்டர் நீல் முதல் பந்தில் கேப்டன் கோலியையும் (0 ஓட்டங்கள்), 3-வது பந்தில் மணீஷ் பாண்டேவையும் (0 ஓட்டங்கள்) வீழ்த்தினார். இதனால் இந்தியா 11 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
பிறகு களம்புகுந்த கேதார் ஜாதவ், முதல் பந்திலேயே பவுண்டரியை விளாசி ஓட்டங்கள் கணக்கைத் தொடங்கினார். இதனால் முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 34 ஓட்டங்கள் எடுத்தது இந்தியா.
மார்கஸ் ஸ்டாய்னிஸ் வீசிய 16-வது ஓவரின் 4-வது பந்தில் பவுண்டரியை விளாசிய ரோஹித் சர்மா, அதே ஓவரின் கடைசிப் பந்தில் கோல்ட்டர் நீலிடம் கேட்ச் ஆனார். அவர் 44 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 28 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார்.
பின்னர் கேதார் ஜாதவுடன் இணைந்தார் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி. இந்த ஜோடி நிதானமாக ஆட, இந்தியாவின் ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது. ஸ்டாய்னிஸ் வீசிய 22-வது ஓவரில் கேதார் ஜாதவ் அவுட்டனார். அவர் 54 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்கள் எடுத்தார்.
தோனியுடன் ஜோடி சேர்ந்தார் ஹார்திக் பாண்டியா. இந்த ஜோடி நிதானமாக ஆட, 23.5 ஓவர்களில் 100 ஓட்டங்களை எட்டியது இந்தியா. பின்னர், இந்தியா, 36 ஓவர்களில் 5 விக்கெட் இப்புக்கு 148 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
ஆடம் ஸம்பா வீசிய 37-வது ஓவரில் பாண்டியா தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாசியதோடு, 48 பந்துகளில் அரை சதம் கண்டார். அந்த ஓவரில் மட்டும் 24 ஓட்டங்கள் கிடைத்தன. தொடர்ந்து அதிரடியாக ஆடிய பாண்டியா, ஆடம் ஸம்பா வீசிய 41-வது ஓவரில் சிக்ஸரை விளாசிய கையோடு ஆட்டமிழந்தார். அவர் 66 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 83 ஓட்டங்கள் குவித்தார்.
தோனியுடன் இணைந்தார் புவனேஸ்வர் குமார். இந்த ஜோடி சிறப்பாக ஆட, இந்தியாவின் ஸ்கோர் வேகமாக உயர ஆரம்பித்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய தோனி, 75 பந்துகளில் அரை சதம் கண்டார்.
ஃபாக்னர் வீசிய 48-வது ஓவரில் தோனி ஒரு சிக்ஸரையும், இரு பவுண்டரிகளையும் விளாச, இந்தியா 250 ஓட்டங்களைக் கடந்தது. தொடர்ந்து வேகம் காட்டிய தோனி, ஃபாக்னர் வீசிய கடைசி ஓவரில் சிக்ஸரை விளாசிய கையோடு அவுட்டானார். அவர் 88 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 79 ஓட்டங்கள் குவித்தார்.
இறுதியில் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 281 ஓட்டங்கள் குவித்தது இந்தியா.
புவனேஸ்வர் குமார் 32 ஓட்டங்கள், குல்தீப் யாதவ் ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆஸ்திரேலியத் தரப்பில் நாதன் கோல்ட்டர் நீல் மூன்று விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்தியா பேட் செய்த பிறகு மழை பெய்ததால் ஆட்டம் இரண்டு மணி நேரம் தடைபட்டது. இதனால், டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலியாவுக்கு 21 ஓவர்களில் 164 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரரான கார்ட்ரைட் 1 ஓட்டம் எடுத்த நிலையில் பூம்ரா பந்துவீச்சில் அவுட்டானார்.
பின்னர் வந்த கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 1 ஓட்டம் எடுத்த நிலையில் பாண்டியா பந்துவீச்சில் பூம்ராவிடம் கேட்ச் ஆக, டிராவிஸ் ஹெட் 5 ஓட்டங்களில் வெளியேறினார்.
பின்னர் மேக்ஸ்வெல் களமிறங்க, மறுமுனையில் நிதானம் காட்டிய டேவிட் வார்னர் 28 பந்துகளில் 25 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் குல்தீப் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் ஆனார். இதனால் ஆஸ்திரேலியா 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதையடுத்து மேக்ஸ்வெல்லுடன் இணைந்தார் மார்கஸ் ஸ்டாய்னிஸ். ஒரு கட்டத்தில் 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 45 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது ஆஸ்திரேலியா. ஆனால் குல்தீப் வீசிய 11-வது ஓவரில் மேக்ஸ்வெல் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாச, அந்த ஓவரில் மட்டும் 22 ஓட்டங்கள் சேர்த்தது ஆஸ்திரேலியா.
பின்னர் யுவேந்திர சாஹல் வீசிய 12-வது ஓவரின் 5-வது பந்தில் சிக்ஸரை விளாசிய மேக்ஸ்வெல், அடுத்த பந்தில் அவுட்டானார். 18 பந்துகளைச் சந்தித்த மேக்ஸ்வெல் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்கள் எடுத்தார்.
அவரைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் 3 ஓட்டங்கள், மேத்யூ வேட் 9 ஓட்டங்களில் அவுட்டாக, பின்னர் வந்த பேட் கம்மின்ஸ் 9 ஓட்டங்களில் வெளியேறினார்.
பிறகு ஒருபுறம் ஜேம்ஸ் ஃபாக்னர் போராட, மறுமுனையில் திணறிய நாதன் கோல்ட்டர் நீல் 2 ஓட்டங்களீல் வீழ்ந்தார். இறுதியில் 21 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ஓட்டங்கள் எடுத்து தோல்விக் கண்டது ஆஸ்திரேலியா.
ஜேம்ஸ் ஃபாக்னர் 32 ஓட்டங்கள், ஆடம் ஸம்பா 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்தியத் தரப்பில் யுவேந்திர சாஹல் மூன்று விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்திர்.
பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் அசத்திய ஹார்திக் பாண்டியா ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் ஐந்து ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றது இந்தியா.
இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஆட்டம் வரும் 21-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.