ஷுப்மன் கில் அபார சதம்.. இஷான் கிஷான், சூர்யகுமார் அதிரடி அரைசதம்!! இறுதி போட்டியில் ரஹானே படை

By karthikeyan VFirst Published Oct 25, 2018, 5:19 PM IST
Highlights

தியோதர் டிராபி தொடரில் இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இளம் வீரர் ஷுப்மன் கில் அபாரமாக ஆடி சதமடித்து இந்தியா சி அணியை வெற்றி பெற செய்தார்.
 

தியோதர் டிராபி தொடரில் இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இளம் வீரர் ஷுப்மன் கில் அபாரமாக ஆடி சதமடித்து இந்தியா சி அணியை வெற்றி பெற செய்தார்.

தியோதர் டிராபி தொடரில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்தியா ஏ, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா பி மற்றும் ரஹானே தலைமையிலான இந்தியா சி ஆகிய மூன்று அணிகளும் கலந்துகொண்டு ஆடிவருகின்றன. 

இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகளுக்கு இடையேயான போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா பி அணி வெற்றி பெற்றது. இதையடுத்து ரஹானே தலைமையிலான இந்தியா சி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா பி அணிகளுக்கு இடையே நடந்த போட்டியிலும் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பி அணியே வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா பி அணி முதல் அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இதையடுத்து இந்தியா பி அணியுடன் இறுதி போட்டியில் மோதும் அணி எது என்பதை தீர்மானிக்கும் போட்டியில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்தியா ஏ மற்றும் ரஹனே தலைமையிலான இந்தியா சி ஆகிய அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா ஏ அணியின் தொடக்க வீரர்கள் அபிமன்யூ(69 ரன்கள்) மற்றும் அன்மோல்பிரீத் சிங்(59 ரன்கள்) ஆகிய இருவருமே அரைசதம் அடித்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 99 ரன்களை குவித்தது. இவர்களை தொடர்ந்து நிதிஷ் ராணாவும் 68 ரன்களை குவித்தார். அந்த அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 32 ரன்களும் கேதர் ஜாதவ் 25 பந்துகளில் 41 ரன்களும் எடுத்தனர். அதனால் அந்த அணி 50 ஓவர் முடிவில் 293 ரன்களை குவித்தது. 

294 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா சி அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரஹானே இந்த முறையும் ஏமாற்றினார். 14 ரன்களில் ரஹானே ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் முகுந்த் 37 ரன்கள் எடுத்தார். இந்தியா பி அணிக்கு எதிரான போட்டியில் வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்த ரெய்னா, இந்த போட்டியில் 2 ரன் மட்டுமே எடுத்து ரன் அவுட்டானார். 

இதையடுத்து ஷுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் அடித்து ஆடினார். பவுண்டரிகளாக விளாசி அரைசதம் கடந்த இஷான் கிஷான், 69 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு கில்லுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அபாரமாக ஆடியது. அதிரடியாக ஆடி சிக்ஸர்களாக விளாசி மிரட்டிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்து 56 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சிறப்பாக ஆடிய ஷுப்மன் கில் சதம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற செய்தார். 

கில், இஷான், சூர்யகுமார் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா சி அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா பி மற்றும் இந்தியா சி ஆகிய அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டி வரும் 27ம் தேதி நடக்கிறது. 
 

click me!