
இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்த கேப்டன் தோனி. கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, கடந்த ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி இந்திய அணியில் ஒரு வீரராக ஆடிவருகிறார்.
அண்மைக்காலமாக சரியாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார் தோனி. ஐபிஎல்லில் இரண்டு ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு மீண்டும் சென்னை அணிக்கு தலைமையேற்று வழிநடத்திய தோனி, சிறப்பாக கேப்டன்சி செய்து மூன்றாவது முறையாக சென்னை அணிக்கு கோப்பையை கைப்பற்றி கொடுத்ததோடு, பேட்டிங்கும் சிறப்பாக ஆடினார். 16 போட்டிகளில் பேட்டிங் ஆடி 455 ரன்களை குவித்தார்.
ஐபிஎல்லில் அசத்திய தோனி, சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பிவருகிறார். அதனால் தோனி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. தோனி கண்டிப்பாக அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பையில் ஆடுவார் என்றாலும் அவர் மீதான விமர்சனங்களும் அணியில் அவருக்கான இடம் குறித்த பேச்சுகளும் பரவலாக உள்ளன.
கடுமையான விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் கடந்து இந்திய அணியில் தோனி அசைக்க முடியாத இடத்தை பிடித்திருப்பதற்கு காரணம், அவரது அனுபவம் மற்றும் விக்கெட் கீப்பிங் செயல்பாடுதான். எப்போது வேண்டுமானாலும் பேட்டிங்கில் ஃபார்முக்கு திரும்பலாம். ஆனால் அவரது அனுபவம் ஒவ்வொரு போட்டிக்கும் தேவை. கேப்டனுக்கு ஆலோசனை, பவுலர்களுக்கு அறிவுரை என தோனியின் அனுபவம் மிகப்பெரிய திருப்புமுனைகளை ஏற்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவுகிறது.
தோனியின் ஓய்வு குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து அண்மையில் கருத்து தெரிவித்த தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ், தோனி என் அணியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆண்டும் ஆடுவார். அவருக்கு 80 வயதானாலும், சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கலாம், தோனி என் அணியில் இருப்பார். அவர் அபாரமான ஒரு வீரர். அவரது சாதனைகளை எடுத்துப் பாருங்கள். அவரைப்போன்ற ஒரு வீரரை அணியிலிருந்து நீக்க முடியுமா? என்னவானாலும் அவர் அணியில் இருக்கத்தான் வேண்டும். நான் அவரை அணியிலிருந்து நீக்கமாட்டேன் என்று டிவில்லியர்ஸ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தோனிக்கு ஆதரவாக தென்னாப்பிரிக்க அணியின் மற்றொரு முன்னாள் லெஜண்ட் வீரர் ஜாண்டி ரோட்ஸ் குரல் கொடுத்துள்ளார். தோனி குறித்து கருத்து தெரிவித்த ஜாண்டி ரோட்ஸ், தோனி இன்னும் செல்வாக்கு மிக்க வீரர் தான் என்று கூறியுள்ளார்.