நூற்றாண்டின் சிறந்த பந்து.. அதெல்லாம் ஒரு குருட்டு லக்குதாங்க!! நேர்மையா பதில் சொன்ன ஷேன் வார்னே

By karthikeyan VFirst Published Oct 25, 2018, 3:11 PM IST
Highlights

நூற்றாண்டின் சிறந்த பந்துக்கு சொந்தக்காரரான ஷேன் வார்னே, அதுகுறித்த ரகசியத்தை பகிர்ந்துள்ளார். 
 

நூற்றாண்டின் சிறந்த பந்துக்கு சொந்தக்காரரான ஷேன் வார்னே, அதுகுறித்த ரகசியத்தை பகிர்ந்துள்ளார். 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே, தனது சுழலால் எதிரணி வீரர்களை மிரட்டியவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளிதரனுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் 800 விக்கெட்டுகளுடன் இலங்கை சுழல் ஜாம்பவான் முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 708 விக்கெட்டுகளுடன் ஷேன் வார்னே இரண்டாமிடத்தில் உள்ளார். 

ஷேன் வார்னே தனது லெக் ஸ்பின்னால் எதிரணி பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைத்தவர். 1992ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டுவரை ஆஸ்திரேலிய அணிக்காக வார்னே ஆடியுள்ளார். தனது சுழலால் ஆஸ்திரேலிய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர். 

லெக் ஸ்பின்னரான வார்னே, சில சமயங்களில் தாறுமாறாக பந்தை திரும்பச்செய்து பேட்ஸ்மேன்களை மிரட்டி விடுவார். மிரட்டலாக பல பந்துகளை வீசியிருந்தாலும், 1993ம் ஆண்டு நடந்த ஆஷஸ் தொடரின் ஒரு போட்டியில் இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக் கேட்டிங்கின் விக்கெட்டை வீழ்த்திய பந்துதான் நூற்றாண்டின் சிறந்த பந்தாக பார்க்கப்படுகிறது.

வலது கை பேட்ஸ்மேனான மைக் கேட்டிங்கிற்கு வார்னே வீசிய பந்து ஒன்று, லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆகி ஆஃப் ஸ்டம்பை பதம் பார்த்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மைக் கேட்டிங் சிறிது நேரம் களத்தில் நின்று என்ன நடந்தது என்று யோசித்துவிட்டு  செல்லும் அளவிற்கு மாயாஜால பந்து அது. அதுதான் நூற்றாண்டின் சிறந்த பந்தாக பார்க்கப்படுகிறது. 

அதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ஷேன் வார்னே, லெக் ஸ்பின்னருக்கு விழுந்த ஒரு அருமையான லெக் பிரேக் அது. ஆனால் எதேச்சையாக விழுந்த பந்துதான். நான் திட்டமிட்டு வீசவில்லை. அதன்பிறகும் கூட அப்படியொரு பந்தை நான் வீசியதில்லை என்று ஷேன் வார்னே மிக நேர்மையாக பதிலளித்தார். 
 

click me!