லயனின் சுழலில் சுருண்டது இந்தியா!! வலுவான முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடும் ஆஸ்திரேலியா

By karthikeyan VFirst Published Dec 16, 2018, 11:35 AM IST
Highlights

நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாத நாதன் லயன் இன்றைய ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தையே தலைகீழாக புரட்டி போட்டார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானதை அடுத்து, 43 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் கடந்த 14ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 326 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் முரளி விஜய் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் 8 ரன்களுக்கு உள்ளாகவே விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து போட்டியை கையிலெடுத்த புஜாரா மற்றும் கோலி ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தனர். 

எனினும் இந்த ஜோடியை ஸ்டார்க் பிரித்துவிட்டார். புஜாராவை 24 ரன்களில் ஸ்டார்க் வெளியேற்ற, கோலியுடன் ரஹானே ஜோடி சேர்ந்தார். களமிறங்கியது முதலே அடித்து ஆடிய ரஹானே, பின்னார் நிதானமாக ஆடினார். கோலி அரைசதம் கடக்க, அவரை தொடர்ந்து ரஹானேவும் அரைசதம் அடித்தார். அத்துடன் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தது. கோலி 82 ரன்களுடனும் ரஹானே 51 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணி. 

மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் முதல் ஓவரை ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லயன் வீசினார். இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ரஹானே ஆட்டமிழந்தார். இதையடுத்து கோலியுடன் ஜோடி சேர்ந்த ஹனுமா விஹாரி தெளிவாக ஆடினார். எனினும் ஹேசில்வுட்டின் பந்தில் அவரும் ஆட்டமிழந்தார். 

சிறப்பாக ஆடிய கோலி, டெஸ்ட் அரங்கில் தனது 25வது சதத்தை பூர்த்தி செய்தார். இது கோலியின் 63வது சர்வதேச சதமாகும். சதமடித்த கோலியை 123 ரன்களில் வெளியேற்றினார் பாட் கம்மின்ஸ். இதையடுத்து ஷமி கோல்டன் டக் அவுட்டாகி வெளியேற, உணவு இடைவேளை விடப்பட்டது. உணவு இடைவேளைக்கு பின் இஷாந்த் சர்மா, ரிஷப் பண்ட், பும்ரா ஆகியோரை சீரான இடைவெளியில் வெளியேற்றினார் நாதன் லயன்.

இதையடுத்து இந்திய அணி 283 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாத நாதன் லயன் இன்றைய ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தையே தலைகீழாக புரட்டி போட்டார். ரஹானே, ரிஷப் பண்ட், ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா ஆகிய 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை சுருட்டினார்.

இதையடுத்து 43 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆஸ்திரேலிய அணி ஆடிவருகிறது. 
 

click me!