இந்தியா  -  சீன தைபே மோதும் ஆட்டம் இன்று... மிஸ் பண்ணாமல் பாருங்க நிறைய ஆச்சரியம் காத்திருக்கு...

First Published Jun 1, 2018, 12:20 PM IST
Highlights
India - China Taipei football match Today


இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியில்  இந்தியா  -  சீன தைபே அணிகள் மோதும் ஆட்டம் மும்பையில் இன்று நடைபெறுகிறது.

சீன தைபே, கென்யா, நியூஸிலாந்து உள்ளிட்ட நான்கு நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியானது, ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தயாராகி வரும் இந்திய அணிக்கான ஒரு சோதனை போட்டியாக கருதப்படுகிறது.
 
ஸ்டீபன் கான்ஸ்டன்டீன் பயிற்சியிலான இந்திய அணி, கடந்த 2016 ஜூன் முதல் இந்தாண்டு மார்ச் வரையில் தொடர்ந்து 13 ஆட்டங்களில் வெற்றிபெற்று வந்துள்ளது.  அத்துடன், கடந்த ஆண்டு அக்டோபரிலேயே ஆசிய கோப்பை போட்டிக்கும் தகுதிபெற்றது. 

எனினும், ஆசிய கோப்பை போட்டிக்கான தகுதிச்சுற்றின் கடைசி ஆட்டத்தில் கைர்ஜிஸ்தானிடன் 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது இந்தியா. இது, இந்தியாவின் தொடர் வெற்றிக்கு தடையை ஏற்படுத்தியது. 

இருப்பினும், அந்த 13 தொடர் வெற்றியானது சீன தைபேவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவுக்கு மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக இருக்கும். இந்தப் போட்டியில் தரவரிசையின் அடிப்படையில் இந்தியாவே முதலில் 97-வது இடம் உள்ளது. 

மேலும், கடந்த பத்து ஆண்டுகளில் சீன தைபே அணியை மூன்று முறை வீழ்த்தியுள்ள இந்தியா, ஒரு ஆட்டத்தை சமன் செய்துள்ளது. இந்த ஆட்டம், இந்திய அணிக்காக கேப்டன் சுனில் சேத்ரி விளையாடும் 99-ஆவது ஆட்டமாகும். 

இந்த ஆட்டத்தில் அவரோடு இணைந்து பல்வந்த் சிங், ஜிஜி லால்பெக்லுவா ஆகியோர் முன்களத்தில் அதிரடியாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஹலிசரண் நர்ஸாரி, உதாந்த சிங், பிகேஷ் ஜெய்ரு, முகமது ரஃபிக் ஆகியோர் நடுகளத்தில் பங்களிக்கின்றனர்.
 
சந்தேஷ் ஜிங்கன், பிரீத்தம் கோட்டல், சௌவிக் சக்ரவர்த்தி, அனாஸ் எடதோடிகா ஆகியோர் தடுப்பாட்டத்தில் பலம் சேர்க்க, கோல்கீப்பராக குர்பிரீத் சிங் சாந்து செயல்படவுள்ளார். 

இரண்டு அணிகள் மோதும் இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
 

tags
click me!