
2018-ஆம் ஆண்டு சீசனில் உலகின் முதல்நிலை வீராங்கனையாக முன்னேற விரும்புகிறேன். என்று இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து புதுவருட ஆசையை தெரிவித்துள்ளார்.
இந்த சீசனில் அதிகபட்சமாக இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார் பி.வி.சிந்து. செய்யது மோடி, இந்தியா ஓபன், கொரிய ஓபன் ஆகியவற்றில் பட்டம் வென்றதுடன், உலக சாம்பியன்ஷிப், ஹாங்காங் ஓபன், துபை சூப்பர் சீரிஸ் ஆகியவற்றில் இறுதிச்சுற்று வரை முன்னேறியிருந்தார்.
இந்த நிலையில் சிந்து டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
"2018-ஆம் ஆண்டு சீசனில் உலகின் முதல்நிலை வீராங்கனையாக முன்னேற விரும்புகிறேன். தற்போது 3-வது இடத்தில் இருக்கும் நான் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் முதலிடம் பெறுவேன். எனவே, ரேங்கிங்கில் முன்னேறுவதற்காக எனக்கு நெருக்கடி ஏற்படுத்திக் கொள்ளப்போவதில்லை.
தற்போது மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நீடிக்கும் நேரம் அதிகரித்துள்ளது. வீராங்கனைகள் சவால் அளிப்பவர்களாக இருப்பதாலேயே ஆட்டநேரம் நீடிக்கிறது. இனி, குறைந்த நேரம் கொண்ட ஆட்டங்கள் இருக்காது எனக் கருதுகிறேன்.
போட்டிகளின்போது ரசிகர்களின் உற்சாக ஊக்குவிப்பு எந்தவித நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, அது உத்வேகம் அளிக்கிறது.
ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நான் எனது முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதையே நோக்கமாக கொண்டிருக்கிறேன்.
போட்டிகளைப் பொருத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் சில போட்டிகளின் அட்டவணை மாறலாம். போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். அதை நாம் குறைகூற இயலாது. என்னைப் பொருத்த வரையில் அதனால் ஆட்டத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை" என்று அவர் கூறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.