
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் ஐந்தாவது ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் எஃப்சி புனே சிட்டி அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது டெல்லி டைனமோஸ் அணி.
டெல்லி மற்றும் புனே அணிகளுக்கான இடையேயான ஆட்டம் புனேவில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்து.
சொந்த மண்ணில் நடைபெறும் தனது முதல் ஆட்டத்தில் ஆக்ரோஷத்துடன் ஆடத் தொடங்கியது புணே அணி. அதற்கு சற்றும் சளைக்காத வகையில் டெல்லி அணியும் ஆடியது. இரு அணிகளுமே தனது முதல் கோல் வாய்ப்புக்காக கடுமையாகப் போராடின.
இந்த நிலையில், ஆட்டத்தின் முதல் கால்மணி நேரத்துக்குப் பிறகு தனது சக வீரர் பாஸ் செய்த பந்தை டெல்லி வீரர் மிராபஜே கோல் போஸ்டுக்கு நேராக அனுப்ப முனைந்தும் அது பலனளிக்கவில்லை.
இதேபோல், புணே வீரர் தலையால் முட்டி கோல் போஸ்டுக்கு அனுப்பிய பந்தை அருமையாக தடுத்தார் டெல்லி கோல்கீப்பர் அல்பினோ கோம்ஸ். இவ்வாறாக தொடர்ந்த ஆட்டத்தில் இரு அணிகளுக்குமே கோல் வாய்ப்பு கிடைக்காததால், முதல் பாதி 0-0 என்ற கணக்கில் முடிந்தது.
பின்னர் தொடங்கிய 2-வது பாதியில் டெல்லி வீரர் பாலினோ டயாஸ் ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார். 46-ஆவது நிமிடத்தில் சக வீரர் லாலியான்ஸுவாலா பாஸ் செய்த பந்தை தலையால் முட்டி கோலடித்தார் அவர்.
ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் டெல்லியின் கோல் எண்ணிக்கை 2-னது. இந்தமுறை பாலினோ டயாஸ் உதவியுடன் லாலியான்ஸுவாலா கோல் அடித்தார். இதனால் டெல்லி 2-0 என முன்னிலை பெற்றது.
புணே முதல் கோலுக்கு தடுமாறி வந்த நிலையில், டெல்லி வீரர் மிராபஜே 65-வது நிமிடத்தில் தனது பங்கிற்கு ஒரு கோல் அடிக்க, டெல்லி 3-0 என முன்னிலை பெற்றது.
இதனிடையே, புணேவின் தொடர் முயற்சிக்கு 67-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. அந்த அணியின் சர்தாக் கோலுயியின் உதவியுடன் அணிக்கான முதல் கோலை அடித்தார் எமிலியானோ அல்ஃபாரோ.
ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் புணே வீரர் மார்கோஸ் டெபர் கோலடிக்க, ஆட்டம் 2-3 என்ற கோல் கணக்கில் பரபரப்பானது. இறுதி நொடிகளில் ஆட்டம் விறு விறுப்படைந்தாலும் முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது டெல்லி.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.