தென்னாப்பிரிக்கா இப்படி செய்திருக்க கூடாது.. அபராதம் விதித்த ஐசிசி

First Published Feb 12, 2018, 11:40 AM IST
Highlights
icc penalty to south africa team


இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. 

மழை மற்றும் மில்லருக்கு கொடுக்கப்பட்ட இரண்டு வாய்ப்புகள் ஆகியவற்றின் காரணமாக இந்திய அணி தோற்க நேரிட்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் சதம் அடித்தார். கோலி 75 ரன்கள் அடித்தார்.

ஆனால், ரஹானே, ஸ்ரேயாஷ் ஐயர், பாண்டியா உள்ளிட்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, 300ஐத் தாண்டி செல்ல வேண்டிய இந்திய அணி 289 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இரண்டாவது பேட்டிங்கின் போது மழை குறுக்கிட்டதால், 28 ஓவராக குறைக்கப்பட்டு 202 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 20 ஓவர் போட்டி போல மாறியதால், அந்த அணி வீரர்கள் அதிரடியாக ஆடி வெற்றி பெற்றனர். 18வது ஓவரில் மில்லரின் கேட்சை ஐயர் தவறவிட்டது, அடுத்து போல்டான பந்து நோபாலானது என அந்த நாள் இந்திய அணிக்கானது அல்ல என்பது அடுத்தடுத்து வெளிப்பட்டது.

இந்த போட்டியில் ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அதிகமான நேரத்தை தென்னாப்பிரிக்க அணி பந்துவீச எடுத்துக்கொண்டது. இதை ஐசிசி-யின் கவனத்திற்கு கொண்டு சென்ற போட்டி நடுவர்கள், தென்னாப்பிரிக்க அணிக்கு அபராதம் விதிக்க பரிந்துரைத்தனர்.

இதையடுத்து அந்த அணியின் கேப்டன் மார்க்ரமிற்கு போட்டி ஊதியத்தில் 20% மற்றும் மற்ற வீரர்களுக்கு ஊதியத்தில் 10%-மும் ஐசிசி அபராதம் விதித்தது.
 

click me!