தோனி மீது கோலியை விட எல்லையில்லா பாசமும் பற்றும் கொண்ட ரோஹித்!! காரணம் என்ன..?

By karthikeyan VFirst Published Sep 27, 2018, 9:00 AM IST
Highlights

விராட் கோலியை விட தோனி மீது ரோஹித் சர்மா எப்போதுமே அதிகமான பாசமும் ஈடுபாடும் கொண்டவர் என்பதை ரோஹித்தின் செயல்பாடுகளின் மூலமாகவே அறிந்துகொள்ள முடியும். 
 

விராட் கோலியை விட தோனி மீது ரோஹித் சர்மா எப்போதுமே அதிகமான பாசமும் ஈடுபாடும் கொண்டவர் என்பதை ரோஹித்தின் செயல்பாடுகளின் மூலமாகவே அறிந்துகொள்ள முடியும். 

இந்திய அணிக்கு ஒருநாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்தவர் தோனி. தோனி இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம்வந்தவர். அவர் கேப்டனாக இருந்த காலத்தில் பல இளம் வீரர்களுக்கு அவர்களது திறமைகளை நிரூபிக்க வாய்ப்பு வழங்கியவர். 

அந்த வகையில், தற்போது இந்திய அணியில் ஆடும் வீரர்கள் அனைவருக்கும் தோனி மீது தனி மரியாதையும் பாசமும் உண்டு. கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற, கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றார். அதன்பிறகு கடந்த ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகினார். அதன்பிறகு அனைத்துவிதமான போட்டிகளுக்கான இந்திய அணிக்கும் விராட் கோலி கேப்டனானார். 

விராட் கோலி ஓய்வில் இருக்கும் போட்டிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். விராட் கோலி, ரோஹித் சர்மா என யார் கேப்டனாக இருந்தாலும் தோனி களத்தில் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கிவருகிறார். தோனியின் அனுபவம் இந்திய அணிக்கும் அணியின் கேப்டனுக்கும் எப்போதுமே பயனளித்து வருகிறது.

இந்நிலையில், விராட் கோலியை விட தோனி மீது ரோஹித் சர்மா அதிகமான ஈடுபாடும் மரியாதையும் வைத்துள்ளார். கோலி கேப்டனான பிறகு தோனியை முன்வரிசையில் களமிறக்குவதை பற்றி கோலி யோசித்ததே கிடையாது. ஆனால் ரோஹித் கேப்டனாக இருக்கும் சமயங்களில் எல்லாம் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தோனிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பார். அதை பலமுறை பார்க்க முடிந்திருக்கிறது.

கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக நடந்த தொடரில் ஒரு போட்டியில் தோனியை மூன்றாம் வரிசையில் களமிறக்குமாறு மைதானத்தில் இருந்தே பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு சிக்னல் கொடுத்தார். அது வைரலானது. கோலியின் கேப்டன்சியில் 6 அல்லது 7வது வரிசையில் களமிறங்கிவந்த தோனியை மூன்றாம் வரிசையில் களமிறக்கி அவர் ஆடுவதற்கு வாய்ப்பு வழங்கினார் ரோஹித். ரோஹித்தின் செயல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

அதேபோல தோனியின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவார் ரோஹித். இந்நிலையில், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோஹித்தும் ஷிகர் தவானும் ஆடாததை அடுத்து தோனி கேப்டனாக செயல்பட்டார். கேப்டன்சியில் இருந்து விலகிய தோனியை மீண்டும் கேப்டனாக்கி அழகுபார்த்தார் ரோஹித். இப்படி தொடர்ந்து தோனி மீதான தனது மரியாதையையும் பாசத்தையும் ஏதாவது ஒரு வகையில் ரோஹித் காட்டிவருகிறார். 

அதற்கு ரோஹித்துக்கு தோனி வழங்கிய வாய்ப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். மிடில் ஆர்டரில் தொடர்ந்து சொதப்பிவந்த ரோஹித் சர்மாவை தொடக்க வீரராக களமிறக்கிவிட்டவர் தோனி. ரோஹித் தொடக்க வீரராக களமிறங்கிய பிறகுதான் அவரது திறமையை நிரூபித்து, இந்திய அணியின் நிரந்தர தொடக்க வீரரானார். தொடக்க வீரராக களமிறங்கி மூன்று இரட்டை சதங்களை குவித்து சாதனை படைத்துள்ளார். எனவே தனது திறமையை நிரூபிக்க வாய்ப்பளித்த தோனிக்கு நன்றி செலுத்தும் விதமாக அவர் மீதான மரியாதையை வெளிக்காட்டும் விதமாக அவருக்கு ரோஹித் முன்னுரிமை வழங்கிறார் ரோஹித்.
 

click me!