ரோஹித்துக்காக வரிசைகட்டி காத்திருக்கும் சாதனைகள்!! சாதிப்பாரா ஹிட்மேன்..?

By karthikeyan VFirst Published Nov 23, 2018, 1:01 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ரோஹித் சர்மாவுக்காக காத்திருக்கும் சாதனைகள் குறித்து பார்ப்போம். 

ரோஹித் சர்மாவுக்காக பல சாதனைகள் வரிசைகட்டி காத்திருக்கின்றன. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடக்கும் இரண்டாவது டி20 போட்டியில் ரோஹித் சர்மா சிறப்பாக ஆடினால் அந்த சாதனைகளை எல்லாம் செய்ய வாய்ப்புள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி இன்று நடக்கிறது. முதல் போட்டியில் ரோஹித் சர்மா வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார். இந்திய அணியும் டக்வொர்த் முறைப்படி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டமுடியாமல் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்நிலையில், இன்று நடக்கும் போட்டியில் ரோஹித் சர்மாவுக்காக பல சாதனைகள் காத்திருக்கின்றன. அவை குறித்து பார்ப்போம். 

1. ரோஹித் சர்மா 2018 காலண்டர் ஆண்டில் டி20 போட்டிகளில் 567 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் 33 ரன்கள் எடுத்தால், இந்த ஆண்டில் டி20 போட்டிகளில் 600 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெறுவார். ரோஹித்தின் பேட்டிங் பார்ட்னர் தவான் 648 ரன்களுடன் இந்த ஆண்டில் டி20யில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதுவரை ஒரு ஆண்டில் 600 ரன்களை குவித்த இரண்டே வீரர்கள் கோலியும் தவானும்தான். ரோஹித் 33 ரன்களை கடக்கும் பட்சத்தில் அந்த பட்டியலில் ரோஹித் இணைவார். கோலி 2016ம் ஆண்டு 641 ரன்களை குவித்துள்ளார்.

2. சிக்ஸர்கள் அடிப்பதில் வல்லவரான ரோஹித் சர்மா, இன்னும் 4 சிக்ஸர்கள் அடித்தால் டி20 போட்டியில் 100 சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை படைப்பார். 

3. சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 2214 ரன்களுடன் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார். 2271 ரன்களுடன் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் முதலிடத்தில் உள்ளார். எனவே மார்டின் கப்டிலை முந்தி முதலிடத்தை பிடிக்க ரோஹித்துக்கு இன்னும் 58 ரன்கள் மட்டுமே தேவை. 

4. சர்வதேச அளவில் மகளிர் கிரிக்கெட்டையும் உள்ளடக்கிய விதத்தில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் வீரர் - வீராங்கனைகள் பட்டியலில் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் ரோஹித்தை விட 10 ரன்கள் அதிகமாக உள்ளார். எனவே 11 ரன்கள் அடித்தால் மிதாலி ராஜை பின்னுக்குத்தள்ளி அதிலும் முதலிடம் பிடிப்பார் ரோஹித். 

இந்த சாதனைகளை எல்லாம் ரோஹித் இன்று நிகழ்த்துவாரா என்று பார்ப்போம். 
 

click me!