கோலி இல்லைல.. பத்தையும் மொத்தமா தூக்குறேன்!! பாகிஸ்தான் பவுலர் சவால்

By karthikeyan VFirst Published Sep 7, 2018, 11:09 AM IST
Highlights

ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த முயன்று தங்களது அணி வெற்றி தேடித்தருவேன் என பாகிஸ்தான் பவுலர் ஹசன் அலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 

ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த முயன்று தங்களது அணி வெற்றி தேடித்தருவேன் என பாகிஸ்தான் பவுலர் ஹசன் அலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

14வது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய 6 அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன. 

செப்டம்பர் 15ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் இலங்கையும் வங்கதேசமும் மோதுகின்றன. செப்டம்பர் 18ம் தேதி ஹாங்காங் அணியுடன் மோதும் இந்திய அணி, அதற்கு மறுநாளான 19ம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. 

கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் மோதியதற்கு அடுத்து, ஓராண்டுக்கு பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுவதால் அந்த போட்டி உலகளவில் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட உள்ளார். கோலி களமிறங்கும் மூன்றாவது வரிசையில் ராகுல் களமிறங்க உள்ளார். 

இந்நிலையில், ஆசிய கோப்பை தொடர் குறித்தும் இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்தும் பேசியுள்ள பாகிஸ்தான் பவுலர் ஹசன் அலி, இந்தியாவிற்கு எதிரான ஆட்டம் மட்டுமல்லாமல் ஆசிய கோப்பை தொடரின் அனைத்து போட்டியிலும் கவனம் செலுத்துவோம். இந்தியாவுக்கு எதிரான போட்டி என்றாலே எங்களுக்கு வெல்ல வேண்டும் என்ற உத்வேகம் வந்துவிடுகிறது. இதே உத்வேகத்துடன் இந்தியாவை எதிர்கொள்வோம். 

பொதுவாக ஒவ்வொரு பவுலரும் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு விரும்புவார்கள். ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த முயல்வேன். எங்கள் அணிக்கு வெற்றி தேடித்தருவேன். ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியில் விராட் கோலி இல்லை என்பது எங்களுக்கு மிகப்பெரிய சாதகமாக இருக்கும். விராட் கோலி இல்லாததால் இந்திய அணி மிகுந்த நெருக்கடியில் சிக்கப்போகிறது என ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்திய அணி, 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது. அந்த போட்டியில் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் ஹசன் அலி. 
 

click me!