கேட்ச்சை விட்டது மட்டுமல்ல.. படுமோசமான ஃபீல்டிங்கால் கடுப்பான ஹர்திக் பாண்டியா!! தலையில் அடித்து கோபத்தை காட்டிய ஹர்திக்

By karthikeyan VFirst Published Feb 10, 2019, 3:05 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா வீசிய 13வது ஓவரில் இரண்டு கேட்ச்கள் தவறவிடப்பட்டதால் ஹர்திக் பாண்டியா கடுப்பாகி தலையில் அடித்துக்கொண்டார். 
 

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா வீசிய 13வது ஓவரில் இரண்டு கேட்ச்கள் தவறவிடப்பட்டதால் ஹர்திக் பாண்டியா கடுப்பாகி தலையில் அடித்துக்கொண்டார். 

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்ததால் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. இந்த போட்டியில் சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டார். 

தொடக்க வீரர்கள் முன்ரோ மற்றும் சேஃபெர்ட் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடினர். முதல் ஓவரிலேயே 11 ரன்களை குவித்தனர். புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா ஆகிய நால்வரின் பவுலிங்கையும் அடித்து நொறுக்கினர்.

8வது ஓவரை தனது முதல் ஓவராக வீசிய குல்தீப் யாதவ், சேஃபெர்ட்டை வீழ்த்தி பிரேக் கொடுத்தார். தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கில் சேஃபெர்ட் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருவழியாக கஷ்டப்பட்டு முதல் விக்கெட்டை வீழ்த்திய போதிலும் மற்றொரு தொடக்க வீரரான முன்ரோ 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். 

அதன்பிறகு ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆடினார். இந்திய அணியை அச்சுறுத்தி கொண்டிருந்த முன்ரோவை வீழ்த்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார் ஹர்திக் பாண்டியா. ஹர்திக் வீசிய 13வது ஓவரின் முதல் பந்தில் முன்ரோ கொடுத்த கேட்ச்சை கலீல் அகமது தவறவிட்டார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் முன்ரோ அடித்த ஷாட்டை விஜய் சங்கர் மிஸ் ஃபீல்டு செய்ய பந்து பவுண்டரிக்கு சென்றது. அதே ஓவரின் கடைசி பந்தில் குல்தீப் யாதவும் மிஸ் ஃபீல்டு செய்தார். இதையடுத்து கடுப்பான ஹர்திக் பாண்டியா, தலையில் அடித்துக்கொண்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அதற்கு அடுத்த ஓவரிலேயே குல்தீப்பின் பந்தில் முன்ரோ ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து 76 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே வில்லியம்சன் கலீல் அகமதுவின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு டெத் ஓவர்களில் அடியாக கோலின் டி கிராண்ட்ஹோம் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 16 பந்துகளில் 30 ரன்களை விளாசினார். டெய்லரும் மிட்செலும் தங்கள் பங்கிற்கு சிறப்பாகவே ஆடினர். 20 ஓவர் முடிவில் அந்த அணி 212 ரன்களை குவித்தது.

213 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி ஆடிவருகிறது. 

click me!