கோலி தலைமையிலான இந்திய அணிக்கு சவால் விடும் முன்னாள் கேப்டன்..!

First Published Dec 9, 2017, 6:02 PM IST
Highlights
greme smith challenges kohli lead indian team


இந்திய அணிக்கு உண்மையான பரிட்சையாக தென் ஆப்பிரிக்க தொடர் அமையும் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்திவரும் இந்திய அணி, இந்த ஆண்டில் மட்டும் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை வென்று, டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்திலும் தென் ஆப்பிரிக்க அணி 111 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. முதலிடத்தில் உள்ள இந்திய அணியை விட பெரிய வித்தியாசத்துடன் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியின் அருகிலேயே எந்த அணியாலும் நெருங்க முடியவில்லை.

அந்த அளவிற்கு கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவருகிறது.

கடைசியாக அண்மையில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 1-0 என இந்திய அணி வென்றது. அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று இந்திய அணி விளையாட உள்ளது. இதுவரை தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றதே கிடையாது.

தென் ஆப்பிரிக்க மைதானங்கள் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும். தற்போதைய இந்திய அணி பேட்டிங் வரிசை, வேகப்பந்து வீச்சை சிறப்பாக ஆடக்கூடிய திறன்வாய்ந்த அணி. அதேநேரத்தில் எதிரணிக்கு சவால்விடும் வகையில், புவனேஷ்குமார், பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் என்ற சிறந்த வேகப்பந்து வரிசையை இந்திய அணி கொண்டுள்ளது. எனவே இம்முறை தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளருமான ராகுல் டிராவிட், கோலி தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்திய அணி எத்தனை டெஸ்ட் தொடர்களை வென்றிருந்தாலும் தென் ஆப்பிரிக்காவில் தான் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு உண்மையான பரிட்சையே ஆரம்பிக்கப் போகிறது. ஆக்ரோஷமாக பந்துவீசினால் மட்டுமே தென் ஆப்பிரிக்காவை இந்தியாவால் வீழ்த்த முடியும் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் கூறியுள்ளார். 

தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைக்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
 

click me!