
உலக தடகள சாம்பியன்ஷிப் 2025-இன் ஆண்களுக்கான மாரத்தான் வரலாற்றின் மிக அற்புதமான போட்டிகளில் ஒன்றாக மாறியுள்ளது. திங்கள்கிழமை (செப்டம்பர் 15) நடைபெற்ற இறுதிப்போட்டியில், தான்சானியாவின் ஆல்ஃபோன்ஸ் ஃபெலிக்ஸ் சிம்பு, ஜெர்மனியின் அமனால் பெட்ரோஸை ஒரு நூலிழை வித்தியாசத்தில் வீழ்த்தி, தங்கம் வென்றார். இது தான்சானியாவுக்கு உலக சாம்பியன்ஷிப்பில் கிடைத்த முதல் தங்கப் பதக்கம் ஆகும்.
0.03 வினாடி வித்தியாசத்தில் வெற்றி
42.195 கிலோமீட்டர் தூர மாரத்தான் ஓட்டம், வெறும் 0.03 வினாடி வித்தியாசத்தில் தீர்மானிக்கப்பட்டது. சிம்பு, இறுதிப் புள்ளியில் பெட்ரோஸை முந்திச் சென்று, தனது வலது கையை நீட்டி வெற்றியைத் தன்வசப்படுத்தினார். தங்கம் மற்றும் வெள்ளி வென்றவர்களுக்கு இடையிலான வித்தியாசம் 0.05 வினாடிக்கும் குறைவாக இருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சிம்பு மற்றும் பெட்ரோஸ் இருவரும் 2 மணி 9 நிமிடங்கள் மற்றும் 48 வினாடிகள் என்ற ஒரே நேரத்தில் பந்தயத்தை முடித்தனர். பெட்ரோஸ், டோக்கியோவின் தேசிய மைதானத்திற்குள் நுழையும்போது முன்னிலையில் இருந்தாலும், அரை வினாடிக்கும் குறைவான வித்தியாசத்தில் தங்கத்தை இழந்தார். மூன்றாவது இடத்தைப் பிடித்த இத்தாலியின் இலியாஸ் அவூனி 2:09:53 என்ற நேரத்தில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.
33 வயதான சிம்பு கூறுகையில், "நாங்கள் மைதானத்திற்குள் நுழைந்தபோது, நான் வெற்றி பெறுவேனா என்று உறுதியாகத் தெரியவில்லை," என்றார். "நான் வென்றேனா என்பதும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் வீடியோ திரையில் எனது பெயரை முதல் இடத்தில் பார்த்தபோது, நிம்மதியாக உணர்ந்தேன். இது உலக சாம்பியன்ஷிப்பில் தான்சானியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்." எனவும் அவர் கூறினார்.
இந்த வெற்றி, சிம்புவின் முதல் உலக சாம்பியன்ஷிப் பட்டம் ஆகும். இவர் இதற்கு முன்பு 2017 லண்டன் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கமும், கடந்த ஏப்ரல் மாதம் பாஸ்டன் மாரத்தான் போட்டியில் இரண்டாம் இடமும் பெற்றிருந்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.