
ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்பு ஆடிய இந்திய அணி 16 ஓவரில் 3 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு ஒரு பரபரப்பான தருணம் நிகழ்ந்தது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், தேசிய கீதம் ஒலிக்கவிடப்படும்போது பாகிஸ்தானின் தேசிய கீதத்திற்கு பதிலாக 'ஜிலேபி பேபி' பாடல் ஒலிக்கவிடப்பட்டது. DJவின் தவறால் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
டாஸ் முடிந்த பிறகு, தேசிய கீதம் ஒலிக்கவிடப்பட்டது. பாகிஸ்தான் வீரர்கள் தோளில் கை போட்டு நின்றனர். ஆனால், தவறுதலாக 'ஜிலேபி பேபி' பாடல் ஒலிக்கவிடப்பட்டது. உடனடியாக இசை நிறுத்தப்பட்டு, பாகிஸ்தானின் தேசிய கீதம் ஒலிக்கவிடப்பட்டது.
இந்தியா சூப்பர் பவுலிங்
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் போட்டி இதுவாகும். முன்னதாக பாகிஸ்தான் அணி 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணிக்கு 128 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பும்ரா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினர். ஷஹீன் அஃப்ரிதி 33 ரன்கள் எடுத்தார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்தியா எளிதில் வெற்றி
இந்த எளிய இலக்கை இந்திய அணி தனது அதிரடி பேட்டிங்கால் எளிதாக துரத்தி வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா வெறும் 13 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் அடித்தார். கேப்டன் சூர்யகுமார் 47 ரன்கள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.