
இந்திய அணியின் நீண்டகால கேப்டன் தேர்வாக கோலி இருப்பாரா என்பது சந்தேகம் தான் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் மட்டுமல்லாது, பிசிசிஐயிலும் கோலியின் ஆதிக்கம்தான் இருக்கிறது. கோலியை கட்டுப்படுத்தி அவரது முடிவுகளை கேள்விக்குள்ளாக்கும் மற்றும் அவரை அடக்கும் திறன் வாய்ந்த பயிற்சியாளர் தேவை. இல்லையெனில் இந்திய அணி பெரும் சரிவை சந்திக்கும் என ராமச்சந்திர குஹா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கோலியின் கேப்டன்சி மீது தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித்தும் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
தென்னாப்பிரிக்க தொலைக்காட்சி ஒன்றில் கிரீம் ஸ்மித்தும் சுனில் கவாஸ்கரும் பேசினர். அப்போது பேசிய ஸ்மித், கோலியை பொறுத்தவரை அவர் ஒரு சிறந்த வீரர். அவரது ஆட்டம் பற்றி அவருக்கு நன்கு தெரிந்திருக்கிறது. ஆனால் மைதானத்தில் அவரே அனைவரின் தரநிலையையும் நிறுவுகிறார்.
எப்படிப்பட்ட பயிற்சியாளர் தேவை?
கோலியை ஆக்கப்பூர்வமாக வழிநடத்தும், அவரது முடிவுகளை கேள்விகேட்கும் மற்றும் மாற்றும் பயிற்சியாளர் இந்திய அணிக்கு தேவை.
கோலி சிறந்த கேப்டனா?
கோலி ஒரு தனித்துவமான வீரர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சிறந்த கேப்டனா என்றால், உறுதியாக கூற முடியாது. கோலியின் தீவிரம் அவரது ஆட்டத்துக்கு உதவுகிறது. ஆனால், ஒரு கேப்டனாக எப்படியான தாக்கத்தை அணி மீது செலுத்துகிறோம் என்பதை கோலி பரிசீலிக்க வேண்டும். ஒரு கேப்டனாக கோலி, இந்த இடத்தில் வளர வேண்டியுள்ளது. சில நேரங்களில் கோலியின் எதிர்வினைகள், அணியின் மற்ற வீரர்களிடத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
கோலியின் கேப்டன்சி, அவரது அணுகுமுறை, ஆதிக்கம் ஆகியவை குறித்த பேச்சுகளும் விமர்சனங்களும் வலுவாக எழ தொடங்கிவிட்டன. எனவே நீண்ட நாட்கள் கோலி கேப்டனாக நீடிப்பாரா? அல்லது புதிய கேப்டன் தேர்வு செய்யப்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆனால், 2019 உலகக்கோப்பை வரை கோலியே கேப்டனாக நீடிக்கத்தான் வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் அதற்கிடையில் மற்றொரு கேப்டனை நியமித்து மிகக்குறுகிய காலத்தில் உலகக்கோப்பை அணியை உருவாக்குவது கடினம் என்பதால், உடனடியாக கோலி மாற்றப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.