அந்த தம்பிதான் அதுக்கு சரியான ஆளு.. தேர்வுக்குழு என்ன நினைக்குதுனு தெரியல!! கவாஸ்கரின் அதிரடி ஆதரவை பெற்ற ஆல்ரவுண்டர்

By karthikeyan VFirst Published Sep 28, 2018, 12:09 PM IST
Highlights

இந்திய அணிக்கு ஜடேஜா சரியான ஆல்ரவுண்டர் தேர்வாக இருப்பார் என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணிக்கு ஜடேஜா சரியான ஆல்ரவுண்டர் தேர்வாக இருப்பார் என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மற்றும் சிறந்த ஆல்ரவுண்டர் ஆகியோருக்கான தேவை இருக்கிறது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்ய பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே ஆரம்பத்தில் சிறந்த ஆல்ரவுண்டர் என்ற பெயரை பெற்ற ஹர்திக் பாண்டியா, காலப்போக்கில் அவரது சொதப்பலான ஆட்டத்தால் கடுமையான விமர்சனங்களை சந்தித்துவருகிறார்.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல் ஆகியோர் காயமடைந்ததால் ஓராண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஆட வாய்ப்பு பெற்ற ரவீந்திர ஜடேஜா, ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆடும் லெவனில் வாய்ப்பு பெற்றார். ஓராண்டுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த ஜடேஜா, அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி தனது திறமையை நிரூபித்து மாஸ் கம்பேக் கொடுத்தார். அந்த குறிப்பிட்ட போட்டியில் வங்கதேச அணியின் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

அதற்கு அடுத்த போட்டிகளில் ஆட வாய்ப்பு பெற்ற ஜடேஜா நல்ல பங்களிப்பை அளித்துவருகிறார். பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் அணிக்கு சிறப்பான பங்களிப்பு செய்துவருகிறார் ஜடேஜா. ஆசிய கோப்பை தொடரின் மூலம் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்விற்கு, தேர்வுக்குழுவிற்கு தனது பெயரையும் ஒரு ஆப்ஷனாக ஜடேஜா கொடுத்திருக்கிறார். 

இந்நிலையில் ஜடேஜா குறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், ஆல்ரவுண்டருக்கான இடத்தை ஜடேஜா பூர்த்தி செய்வார். ஜடேஜா ஒரு சிறந்த பேட்ஸ்மேன், பவுலர் மற்றும் ஃபீல்டர். ஆனால் தேர்வுக்குழு என்ன நினைக்கிறது என்பதை சில மாதங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 
 

click me!