அவரு ஒன்னும் கபில் தேவ் இல்ல.. இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல!! தெறிக்கவிட்ட தாதா

By karthikeyan VFirst Published Jan 3, 2019, 4:08 PM IST
Highlights

2018ம் ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான பும்ரா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய தொடர்களில் ஆடி 2018ல் மட்டும் 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

இந்திய அணியின் நட்சத்திர பவுலராக திகழ்கிறார். பும்ராவை இந்திய பவுலிங்கின் விராட் கோலி என்று ஆகாஷ் சோப்ரா அண்மையில் புகழ்ந்திருந்தார். அந்தளவிற்கு இந்திய அணியின் அசைக்கமுடியாத சக்தியாக திகழ்கிறார் பும்ரா. 

2018ம் ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான பும்ரா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய தொடர்களில் ஆடி 2018ல் மட்டும் 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர பவுலராக திகழ்வதால் அவரது பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் முக்கியம் என்பதால் அவருக்கு போதுமான ஓய்வு அவ்வப்போது அளிக்கப்பட்டு வருகிறது. 

கடந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான பும்ரா, 9 போட்டிகளில் ஆடி 380 ஓவர்களை வீசியுள்ளார். இந்த ஆண்டு மே மாத இறுதியில் உலக கோப்பை தொடங்க இருப்பதால், உலக கோப்பையில் பும்ராவின் பங்களிப்பு மிகவும் முக்கியம். அதனால் காயமடைந்துவிடாமல் உடற்தகுதியுடன் இருக்க வேண்டியது அவசியம். எனவே அவருக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய ஒருநாள் தொடர்களிலிருந்து ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

ஐபிஎல் முடிந்த ஒரு வாரத்திலேயே உலக கோப்பை தொடங்குகிறது. உலக கோப்பையில் ஆடும் இந்திய பவுலர்கள் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு ஐபிஎல்லில் இருந்து ஓய்வு அளிக்க வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் கோலி ஏற்கனவே பிசிசிஐ-யிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த மும்பை இந்தியன்ஸ் கேப்டனும் இந்திய அணியின் துணை கேப்டனுமான ரோஹித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் பவுலரான பும்ரா ஐபிஎல்லில் ஆடுவார் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக கங்குலி, சேவாக் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கோலிக்கு எதிராகவே கருத்து தெரிவித்திருந்தனர். தோனியும் கூட கோலியின் கருத்திலிருந்து முரண்பட்டிருந்தார். ஐபிஎல்லில் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிரும் பும்ராவிற்கு ஓய்வளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பும்ராவிற்கு ஐபிஎல்லில் ஓய்வு அளிக்கப்படலாம் என்று வெளியான தகவலை தெரிந்துகொண்ட கங்குலி, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்தியா டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், பும்ராவை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இல்லாவிட்டாலும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் கண்டிப்பாக ஆடவைக்க வேண்டும். அதேபோல் அவருக்கு ஐபிஎல்லில் ஓய்வளிக்க அவர் சார்ந்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி கண்டிப்பாக ஒப்புக்கொள்ளாது.  பும்ரா மிகச்சிறந்த திறமைசாலி. உலக கோப்பையை கருத்தில்கொண்டு அவருக்கு ஓய்வளிக்க உள்ளதாக செய்திகளின் வாயிலாக தெரிந்துகொண்டேன். அவர் ஒன்றும் 125 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய கபில் தேவ் கிடையாது. பும்ரா ஒரு இளம் வீரர். எனவே அவர் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. எனவே உலக கோப்பையை கருத்தில்கொண்டு ஓய்வளிப்பது என்பது சரியானது அல்ல என்று கங்குலி திட்டவட்டமாக தனது கருத்தை தெரிவித்தார். 

click me!