கடந்த 10 வருஷத்துல அவருதான் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்!! தல ரசிகர்களை மண்டை சூடாக்கிய தாதா

By karthikeyan VFirst Published Nov 12, 2018, 11:09 AM IST
Highlights

கடந்த 10 ஆண்டுகளில் மிகச்சிறந்த இந்திய விக்கெட் கீப்பர் யார் என்று முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார். 

கடந்த 10 ஆண்டுகளில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் ரித்திமான் சஹா தான் என்று முன்னாள் கேப்டன் கங்குலி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் கடந்த 14 ஆண்டுகளாக ஆடிவரும் தோனி, உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர். அதிகமான ஸ்டம்பிங்குகள் செய்த விக்கெட் கீப்பர். ஸ்டம்பிற்கு பின்னால் நின்று இவரது சமயோசித செயல்பாடுகளால் இந்திய அணி பல நேரங்களில் பலனை அறுவடை செய்துள்ளது. தோனி கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு அந்த இடத்தை ரித்திமான் சஹா பிடித்தார். 

தோனி போன்ற மிகப்பெரிய வீரரின் இடத்தை பூர்த்தி சஹா, விக்கெட் கீப்பிங்கிலும் பேட்டிங்கிலும் சிறப்பாகவே செயல்பட்டார். அவ்வப்போது பேட்டிங்கில் சொதப்பினாலும் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாகவே செயல்பட்டு வந்தார். 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது சஹா காயமடைந்தார். அதனால் அந்த தொடரிலிருந்து பாதியில் வெளியேறினார். காயம் முழுவதுமாக குணமடையாத நிலையில், ஐபிஎல்லில் ஆடிய சஹா, மீண்டும் காயமடைந்தார். அதனால் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் ஆடும் வாய்ப்பை இழந்தார். 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் சஹா இல்லை. சஹா காயத்திலிருந்து குணமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். காயத்திலிருந்து குணமடைந்து விட்டாலும், போட்டியில் ஆடும் அளவிற்கு முழு உடற்தகுதியுடன் சஹா இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை இந்திய அணிக்கு எந்தவிதமான டெஸ்ட் தொடரும் இல்லை. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் ஆடிவரும் சஹாவின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. அப்படியே அவர் மீண்டும் இந்திய அணியில் ஆட வேண்டும் என்றாலும் அடுத்த ஆண்டு ஜூலைக்கு பிறகுதான் டெஸ்ட் போட்டிகள் உள்ளன. அதிலும் அவர் அணியில் சேர்க்கப்படுவாரா என்ற சந்தேகமும் உள்ளது. 

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் கேப்டன் கங்குலி, கடந்த 10 ஆண்டுகளில் சஹா தான் இந்திய அணியின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் என்று கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய கங்குலி, சஹா இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஆடவில்லை. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அவர்தான் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் என்று கருதுகிறேன். அவர் விரைவில் காயத்திலிருந்து மீண்டுவருவார் என்று நம்புவதாக தெரிவித்தார். 

மேலும் காயமடைவதும் காயமடையாமல் இருப்பதும் நமது கையில் இல்லை. அதுவும் விக்கெட் கீப்பர்கள் அதிகமான டைவ் அடிக்க வேண்டியிருக்கும். எனவே காயங்கள் ஏற்படுவது சகஜம்தான். ஆனால் சஹா எந்தளவிற்கு விரைவில் குணமடைகிறாரோ அது அவருக்கு நல்லது என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் சஹா தான் சிறந்த விக்கெட் கீப்பர் என்று கங்குலி கூறியிருப்பது தோனியின் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!