டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரர்களாக யாரை இறக்கலாம்..? கங்குலி அதிரடி.. ஏற்பாரா கோலி..?

First Published Jul 29, 2018, 10:38 AM IST
Highlights
ganguly opinion about opening combination for test cricket


இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரர்களாக யாரை களமிறக்குவது என்பது விவாதம் எழ தொடங்கியுள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்கான அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். டெஸ்ட் போட்டியை பொறுத்தமட்டில் இந்திய அணியில் மிடில் ஆர்டர்கள் பிரச்னையில்லை.

அயல்நாடுகளில் டெஸ்ட் தொடர்களில் ஷிகர் தவானின் மோசமான ரெக்கார்டும் பயிற்சி போட்டியில் தவானின் மோசமான ஆட்டமும் தொடக்க வீரர்கள் குறித்த விவாத்திற்கு வழிவகுத்துள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக எசெக்ஸ் கவுண்டி அணியுடன் இந்திய அணி பயிற்சி போட்டியில் ஆடியது. அந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே டக் அவுட்டாகி வெளியேறினார் ஷிகர் தவான். மொத்தமாக 4 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார். 

ஆனால் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கான மற்றொரு தொடக்க வீரரான ராகுல், இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக ஆடினார். வெளிநாட்டு மைதானங்களில் ஸ்விங் ஆகும் பந்துகளை எதிர்கொள்ள திணறும் தவானுக்கு பதிலாக ராகுலை தொடக்க வீரராக களமிறக்கலாம் என்ற கருத்து எழுந்துள்ளது. தவானின் பேட்டிங் உத்தி ஸ்விங் பந்துகளிடம் எடுபடாது என்ற விமர்சனமும் உள்ளது. 

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கங்குலி, நானாக இருந்தால் முரளி விஜய் மற்றும் ராகுல் ஆகியோரைத்தான் தொடக்க வீரர்களாக களமிறக்குவேன். ஷிகர் தவான் சிறந்த ஒருநாள் வீரர். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் ஓரளவிற்கு ஆடிவந்தார். வெளிநாடுகளில் அவர் டெஸ்ட்டில் தொடக்க வீரராக களமிறங்கி பெரியளவில் ரன்கள் அடிப்பதில்லை என்று ரெக்கார்டுகள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் அவர் சரியாக ஆடியதில்லை. அதனால் நானாக இருந்தால் முரளி விஜய் மற்றும் ராகுல் ஆகியோரைத்தான் தொடக்க வீரர்களாக களமிறக்குவேன் என கங்குலி தெரிவித்துள்ளார்.

கங்குலி மற்றும் பல கிரிக்கெட் ஆலோசகர்களின் கருத்தை கேப்டன் கோலி ஏற்கிறாரா? என்பதை பார்ப்போம். 
 

click me!