தப்பு பண்ணிட்டேன்.. அவர மட்டும் டீம்ல எடுத்திருந்தால் 2003-லயே உலக கோப்பையை தூக்கியிருப்பேன்!! கங்குலி ஓபன் டாக்

By karthikeyan VFirst Published Dec 13, 2018, 2:54 PM IST
Highlights

2003ம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் இறுதி போட்டி வரை சென்ற கங்குலி தலைமையிலான இந்திய அணி, இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்று கோப்பையை இழந்தது. 

2003ம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் இறுதி போட்டி வரை சென்ற கங்குலி தலைமையிலான இந்திய அணி, இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்று கோப்பையை இழந்தது. 

2003ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரில் கங்குலி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக ஆடி இறுதி போட்டிவரை முன்னேறியது. இறுதி போட்டியில் வலுவான ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வி அடைந்து தொடரை இழந்தது. 

இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காத ஆஸ்திரேலிய அணி, தொடர் முழுதும் தோல்வியே இல்லாமல் கோப்பையை வென்றது. இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 359 ரன்களை குவித்தது. 360 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 39.2 ஓவரில் 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றது. 

அந்த உலக கோப்பை தொடரில் விவிஎஸ் லட்சுமணனை சேர்க்காதது தவறு என அப்போதைய கேப்டனாக இருந்த கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரராக வலம்வந்த லட்சுமணன் 16 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆடினார். இதில் 8 ஆண்டுகள் ஒருநாள் போட்டிகளில் ஆடினார். 1998ம் ஆண்டிலிருந்து 2006ம் ஆண்டுவரை ஒருநாள் போட்டிகளில் ஆடினார். அவரது கெரியரில் 86 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2300 ரன்களை எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் லட்சுமணன் அடித்துள்ள 6 சதங்களில் 4 சதங்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிக்கப்பட்டவை. 

அந்தளவிற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடிய வீரர் லட்சுமணன். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை பல போட்டிகளில் இந்திய அணியை இக்கட்டான நிலையிலிருந்து மீட்டெடுத்தவர். அப்படி அவர் அடித்த ஒரு இன்னிங்ஸ் மிக சிறப்பு வாய்ந்தது. 2001ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆன் பெற்ற இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் லட்சுமணன் மற்றும் டிராவிட்டின் அபாரமான ஆட்டத்தால் வெற்றி பெற்று சாதனை படைத்தது. அந்த போட்டியில் லட்சுமணன் அடித்த 281 ரன்கள் மிகச்சிறப்பு வாய்ந்தது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபாரமாக ஆடக்கூடிய வீரரான லட்சுமணனை விட்டுவிட்டு 2003ல் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றது இந்திய அணி. அந்த உலக கோப்பை தொடர் முழுவதிலுமே இந்திய அணி இரண்டே போட்டியில்தான் தோற்றது. இரண்டுமே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிதான். லீக் சுற்றில் ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்திய அணி, இறுதி போட்டியிலும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. எனவே ஒருவேளை லட்சுமணன் அணியில் இருந்திருந்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிடில் ஆர்டரில் டிராவிட்டுக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடியிருக்கக்கூடும். இந்திய அணி கோப்பையை வென்றிருப்பதற்கான வாய்ப்பும் இருந்திருக்கும். ஆனால் அதெல்லாம் நடக்கவில்லை. 

இந்நிலையில் அண்மையில் தனது அடையாளமாக திகழும் 281 ரன்களின் பெயரிலேயே தனது சுயசரிதையை எழுதி வெளியிட்டுள்ள லட்சுமணன், 2003 உலக கோப்பையில் ஆடாதது குறித்த தனது மனநிலையை வெளிப்படுத்தினார். அதுகுறித்த கருத்தில், 2003 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நான் சேர்க்கப்படாதபோது, உலக கோப்பை போன்ற ஒரு பெரிய தொடரில் ஆடுவதற்கு நான் இன்னும் தயாராகவில்லை போலும் என்று நினைத்துக்கொண்டேன் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள அப்போதைய கேப்டன் கங்குலி, லட்சுமணனை எடுக்காததும் ஒரு தவறாக இருந்திருக்கலாம் என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். ஒருவேளை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறந்த பேட்ஸ்மேனான லட்சுமணன் அணியில் இருந்திருந்தால் 2003-லேயே இந்திய அணி உலக கோப்பையை வென்றிருந்தாலும் வென்றிருக்கும்.

click me!