மிடில் ஆர்டரில் இறங்கினாலும் அவுட்டாகத்தான் போற.. ஹைடன், லாங்கரை பாரு..! சேவாக்கை ஊக்குவித்த கங்குலி

By karthikeyan VFirst Published Aug 4, 2018, 4:34 PM IST
Highlights

மிடில் ஆர்டரில் இறங்கி கொண்டிருந்த சேவாக்கை ஊக்குவித்து தொடக்க வீரராக களமிறக்கிவிட்ட கதையை கங்குலி பகிர்ந்துள்ளார்.

இளம் வீரர்கள் பலரை இனம் கண்டு இந்திய அணியில் வளர்த்துவிட்டுள்ளார் கங்குலி. கங்குலி கேப்டனாக இருந்த காலக்கட்டத்தில் சேவாக், யுவராஜ், ஹர்பஜன், தோனி உள்ளிட்ட பல வீரர்கள் இந்திய அணியில் பின்னாளில் நட்சத்திர வீரராக ஜொலித்தனர். 

பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான கருத்துகளை கங்குலி கூறியுள்ளார். தோனியின் திறமையை நிரூபிக்க அவருக்கு அளித்த வாய்ப்பு குறித்து தெரிவித்திருந்ததை ஏற்கனவே பார்த்தோம். அதேபோல, இந்திய அணியின் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக்கை தொடக்க வீரராக களமிறக்கியது குறித்து கங்குலி தெரிவித்துள்ளார். 

2001ம் ஆண்டில் கங்குலியின் கேப்டன்சியில் இந்திய அணியில் அறிமுகமான சேவாக், தான் ரஞ்சி போட்டிகளில் டெல்லி அணிக்காக மிடில் ஆர்டரில் ஆடியதாக கூறி, தொடக்கத்தில் இந்திய அணியில் மிடில் ஆர்டரில் ஆடிவந்தார். 

அந்த சமயத்தில் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் சேவாக்கை சேர்த்து வைத்திருந்தார் கங்குலி. ஆனால், வெளிநாட்டில் போடப்படும் பவுன்ஸர்களை சேவாக்கால் ஆடமுடியாது; தலையில் அடிபடுவதுதான் மிச்சம் என கூறி அவரை அணியில் சேர்க்க வேண்டாம் என தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. 

அதற்கு கங்குலி, ஒரு வீரருக்கு வாய்ப்பே கொடுக்காமல் அவரது திறமை குறித்து எப்படி மதிப்பிடுவீர்கள்? என கேள்வி எழுப்பியதோடு, சேவாக்கை தென்னாப்பிரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளார். 

அந்த தொடரில் தொடக்க வீரராக சேவாக்கை களமிறக்கினார் கங்குலி. அதுகுறித்து பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் பேசிய கங்குலி, தென்னாப்பிரிக்க தொடர் தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்னதாக சேவாக்கிடம், நீ ஏன் தொடக்க வீரராக களமிறங்கக்கூடாது? என கேட்டேன். அதற்கு அவர், நான் ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். டெல்லி அணியிலும் மிடில் ஆர்டரில் தான் ஆடியுள்ளேன் என்று கூறினார். அதற்கு நான், நீ இப்படியே இருந்தால், ஆடும் லெவனில் இடமே கிடைக்காமல் போய்விடும். மேத்யூ ஹைடன், ஜஸ்டின் லாங்கர் போன்றோரெல்லாம் உன்னை மாதிரி நினைத்திருந்தால், அவர்கள் தற்போது அடைந்திருக்கும் நிலையை அடைந்திருக்க முடியாது என்று கூறினேன். 

அதற்கு, ஓபனிங் இறங்கி அவுட் ஆகிவிட்டால் என்ன செய்வது? என சேவாக் கேட்டார். மிடில் ஆர்டரில் இறங்கினாலும் அவுட்டாகத்தான் வேண்டும் என கூறினேன். அதையடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே தொடக்க வீரராக களமிறங்கி சதமடித்து அசத்தினார் என கங்குலி தெரிவித்தார். 

இந்திய அணியின் தொடக்க வீரராக சுமார் 13 ஆண்டுகள் ஆடினார் சேவாக். தொடக்க வீரராக ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம், டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை முச்சதம் விளாசியுள்ளார் சேவாக். இளம் வீரர்களை ஊக்குவித்து அவர்களை வளர்த்தெடுப்பதில் கங்குலி கைதேர்ந்தவர். 

click me!