கேப்டன் எப்படி இருக்க வேண்டும்..? கோலிக்கு கங்குலி அறிவுரை

By karthikeyan VFirst Published Aug 6, 2018, 10:59 AM IST
Highlights

ஒரு கேப்டன் எப்படி செயல்பட வேண்டும் என விராட் கோலிக்கு கங்குலி அறிவுறுத்தியுள்ளார்.

ஒரு கேப்டனாக எப்படி செயல்பட வேண்டும் என இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு முன்னாள் கேப்டன் கங்குலி ஆலோசனை கூறியுள்ளார். 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படாதது கங்குலிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர் இதை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளார். ஒருநாள் அணியை பொறுத்தமட்டில் டாப் ஆர்டரில் பிரச்னையில்லை. ஆனால் மிடில் ஆர்டரில் வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. 

அதேபோல டெஸ்ட் போட்டியை பொறுத்தமட்டில் முதல் மூன்று இடங்களில் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் புஜாரா விலக்கப்பட்டு ராகுல் சேர்க்கப்பட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது வரிசையில் சிறந்த வீரரான புஜாரா நீக்கப்பட்டது விமர்சனத்துக்கு உள்ளானது. 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சொதப்பலான பேட்டிங்கால் தான் இந்திய அணி தோற்றது. சொதப்பலான பேட்டிங்கிற்கு அப்பாற்பட்டு, கோலியின் கேப்டன்சியும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது. 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, தற்போதைய கேப்டன் கோலிக்கு இன்ஸ்டாகிராமில் ஆலோசனை கூறியுள்ளார். அதில், ஒரு வீரரை அணியிலிருந்து நீக்குவதற்கு முன் அவருக்கு போதிய வாய்ப்பளித்திருக்கிறோமோ என்பதை கோலி பரிசீலிக்க வேண்டும். கேப்டன் தான் வீரர்களுக்கு ஊக்கமளித்து நம்பிக்கையளிக்க வேண்டும். வீரர்களின் மனநிலையை கோலி தான் மாற்ற வேண்டும். 

வீரர்களுடன் அமர்ந்து மனம்விட்டு பேச வேண்டும். தன்னால்(கோலி) முடியும்போது மற்ற வீரர்களாலும் முடியும் என்பதை அவர்களுக்கு உணர்த்தி ஊக்கமளிக்க வேண்டும். வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து போதிய அவகாசம் வழங்க வேண்டும். அவர்களுக்கான இடம் அணியில் இருக்கிறது என்ற நம்பிக்கையை கொடுத்தால் தான் அவர்களால் சுதந்திரமாக ஆடமுடியும். அதைவிடுத்து வீரர்களை மாற்றிக்கொண்டே இருந்தால், அணியில் அவர்களது இடம் குறித்த சந்தேகம் எழுவதால், அந்த பதற்றத்தில் அவர்களால் சரியாக ஆடமுடியாமல் போகிறது. அதனால்தான் மற்ற வீரர்களால் அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை காப்பாற்ற முடியாமல் போகிறது. 

இந்திய அணியில் கோலியை தவிர மற்ற எந்த வீரரும் மூன்றுவிதமான போட்டிகளிலும் ஆடுவதில்லை. முன்பெல்லாம் வீரர்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டு போட்டிகளிலும் ஆடினர். அதனால் ஒரு போட்டியில் இல்லாவிட்டாலும் அடுத்த போட்டியில் மீண்டெழுவர். ஆனால் தற்போது அந்த நிலையில்லை. அதை கேப்டன் தான் மாற்ற வேண்டும் என கங்குலி அறிவுறுத்தியுள்ளார். 
 

click me!