ஒன்டே கிரிக்கெட் தொடர்… வெற்றி வாய்ப்பை இழந்த இந்திய அணி !! தொடரைக் கைப்பற்றி  இங்கிலாந்து அபாரம்…

First Published Jul 18, 2018, 8:56 AM IST
Highlights
england won the 3rd one day match and win the series


இந்தியா – இங்கிலாந்து இடையே நடைபெற்ற 3 ஆவது மற்றும் கடைசி  ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில்  நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பந்து வீச்சு தேர்வு செய்தார்.

இந்திய அணியில் லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் இடம் பிடித்திருந்தார்.  அதேபோல் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டிருந்தார்.  சித்தார்த் கவுல் நீக்கப்பட்டு புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டார். 

இந்திய அணியின்  ஓபனிங் பேட்ஸ்மென்களாக களமிறங்கிய ரோகித் சர்மா - தவான் ஜோடி ரன்கள் குவிக்க திணறியது. இதனால், முதல் ஐந்து ஓவர் முடிவில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தது. 18 பந்தில் 2 ரன்கள் மட்டுமே அடித்திருந்த நிலையில் வில்லே பந்துவீச்சில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் இருவரும் நிதானமாக விளையாடி சீரான வேகத்தில் ரன்களை குவித்தனர். 

17.4 வது ஓவரில் இந்தியா இரண்டாவது விக்கெட்டை இழந்தது. ஷிகர் தவான் 44 ரன்களில் அவுட் ஆனார். இதன்பின்னர் விராட் கோலியுடன் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். தினேஷ் கார்த்திக் 21 ரன்களில் அவுட் ஆனார். டோனியுடன் விளையாடிய விராட் கோலி 71 ரன்களில் அவுட் ஆனார். 

அடுத்து வந்த ரெய்னா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க ஹர்திக் பாண்டியா 21 ரன்களும், டோனி 66 பந்தில் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். புவனேஸ்வர் குமார் (21), சர்துல் தாகூர் (13 பந்தில் 22 ரன்கள்) ஓரளவிற்கு விளையாட இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது.  இதையடுத்து  இங்கிலாந்து அணிக்கு 257 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து அணி சார்பில் ரஷித் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். 

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வின்ஸ் மற்றும் பெய்ர்ஸ்டோ இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 4.4 ஓவரின் 43 ரன்கள் அடித்திருந்த நிலையில் தாக்கூர் பந்துசீச்சில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து பெய்ர்ஸ்டோ ஆட்டமிழ்ந்தார்.

அவர் 13 பந்துகளில் 7 பவுண்டரிகள் உள்பட 30 ரன்கள் விளாசினார். மற்றொறு தொடக்க ஆட்டக்காரரான வின்ஸ் 27 ரன்களில் ரன் அவுட் ஆன நிலையில் ஜோ ரூட் மற்றும் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஜோடி சேர்ந்தனர். 

இந்திய பந்துவீச்சை சிதறடித்த இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர். ரூட் 60 பந்துகளிலும், மோர்கன் 58 பந்துகளிலும் அரைசதம் அடித்து இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தினர். 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள் இருவரும் இணைந்து 186 ரன்களை சேர்த்து அசத்தினர்.

இறுதியில், பாண்டியா வீசிய 44வது ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜோ ரூட், 120 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்து ஒருநாள் போட்டிகளில் தனது 13-வது சதத்தை பதிவுசெய்தார். மோர்கன் 108 பந்துகளில் 88 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

click me!