சதமடித்து அசத்திய இங்கிலாந்து அணி 288 ஓட்டங்கள் குவிப்பு…

First Published Dec 9, 2016, 12:14 PM IST
Highlights


இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து வீரர் ஜென்னிங்ஸ் சதமடித்து அசத்த, முதல் நாளில் அந்த அணி 94 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இந்த இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது.
தொடக்க வீரர்களாக, கேப்டன் அலாஸ்டர் குக், கீட்டன் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர்.

ஜென்னிங்ஸ் களம் காணும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முதல் இரண்டு விக்கெட்டுகளும் 91 பந்துகளுக்கு 50 ஓட்டங்கள் எடுத்தது. இருவரும் சிறப்பாக ஆடிவந்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய குக் 60 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் ஜடேஜாவின் பந்துவீச்சில் பார்த்திவ் படேலால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து ஜோ ரூட் ஆடுகளத்துக்கு வர, மறுமுனையில் ஜென்னிங்ஸ் சிறப்பாக ஆடி ஓட்டங்கள் குவிப்பில் ஈடுபட்டார். அவர் 89 பந்துகளில் அரைசதம் கடந்தார். இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 117 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.

பின்னர் தொடங்கிய ஆட்டத்தில் ஜோ ரூட் 41 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 21 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்துவீசிய பந்தை கோலியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

தொடர்ந்து வந்த மொயீன் அலி, ஜென்னிங்ஸுடன் இணைந்தார். அறிமுக வீரரான ஜென்னிங்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 186 பந்துகளில் சதம் கடந்தார்.

தேநீர் இடைவேளையைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில், மொயீன் அலி 102 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவரை அந்த வேகத்திலேயே ஆட்டமிழக்கச் செய்து பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார் அஸ்வின்.

இந்த நிலையில், அடுத்த 2 பந்துகளிலேயே ஜென்னிங்ஸும் வீழ்ந்தார். மொத்தம் 219 பந்துகளைச் சந்தித்திருந்த அவர், 13 பவுண்டரிகளுடன் 112 ஓட்டங்கள் எடுத்தார். பின்னர் வந்த ஜானி பேர்ஸ்டோ 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணி 94 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பென் ஸ்டோக்ஸ் 25, ஜோஸ் பட்லர் 18 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.

இந்தியத் தரப்பில் அஸ்வின் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

tags
click me!