
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் திங்கள்கிழமை தொடங்குகிறது.
வரும் 29-ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ஸ்பெயின் ரஃபேல் நடால், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், வாவ்ரிங்கா, கனடாவின் மிலோஸ் ரோனிக், ஜப்பானின் நிஷிகோரி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்க இருக்கின்றனர்.
இந்த முறையும் ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றால் இப்போட்டியில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சாதனையைப் படைப்பார்.
இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் ராய் எமர்சன் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்த சாதனையை கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றபோது ஜோகோவிச் சமன் செய்தார்.
மேலும், இந்த முறை சாம்பியன் வென்றால் ஆஸ்திரேலிய ஓபனில் தொடர்ந்து 3-ஆவது முறையாக பட்டதைக் கைப்பற்றியும் ஜோகோவிச் சாதனை படைப்பார். அது அவருக்கு 13-ஆவது கிராண்ட் ஸ்லாம் வெற்றியாகவும் அமையும்.
இந்தமுறை ஜோகோவிச்சுக்கு போட்டி கடுமையானதாகவே இருக்கும். முக்கியமாக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஆன்டி முர்ரே கடும் சவாலாக இருப்பார். ஏனெனில், இதுவரை 5 முறை ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள முர்ரே, ஒருமுறை கூட பட்டம் வெல்லவில்லை. அதில் 4 முறை ஜோகோவிச்சிடம் வெற்றியைப் பறிகொடுத்துள்ளார். எனவே, இந்த முறை அவர் எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டார்.
அதேபோல, தரவரிசையில் 3-ஆவது இடத்தில் உள்ள கனடாவின் மிலோஸ் ரோனிக், அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் வாவ்ரிங்கா ஆகியோரும் கடும் சவால் அளிக்கக் கூடிய வீரர்கள்.
இதுதவிர மூத்த வீரர்களான ரோஜர் ஃபெடரர், ரபேல் நடால் ஆகியோரும் சில ஆண்டுகள் இடைவேளைக்குப் பிறகு மேலும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றும் நோக்கில் களமிறங்குகின்றனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.