சீனியர் வீரர்கள் ஓவர்டேக் செய்து தோனி கேப்டனானது எப்படி..? “தல” சொல்லும் காரணம்

First Published Jul 8, 2018, 1:52 PM IST
Highlights
dhoni reveals the reason why he elected as a captain in 2007


அணியில் சீனியர் வீரர்கள் இருந்தநிலையில், தான் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதற்கு என்ன காரணம் என்பதை தோனி பகிர்ந்துள்ளார். 

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம்வந்த தோனி, 2007ம் ஆண்டு தான் அணியின் கேப்டனானார். 2004ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமாகிய தோனிக்கு, மூன்றே ஆண்டுகளில் கேப்டன் பதவி தேடிவந்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார் தோனி.

இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை(2007), ஒருநாள் உலக கோப்பை(2011), சாம்பியன்ஸ் டிராபி(2013) ஆகிய மூன்று சாம்பியன்ஷிப்பையும் வென்று கொடுத்த வெற்றி கேப்டன் தோனி. தோனியின் கேப்டன்சியில் இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் தரவரிசையிலும் முதலிடம் வகித்தது. 

2007ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் நெருக்கடியான காலக்கட்டம். 2007 உலக கோப்பையில் லீக்கிலேயே இந்திய அணி வெளியேறியது. அந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் பொறுப்பிலிருந்து ராகுல் டிராவிட் விலகினார். 

அடுத்த கேப்டனாக அப்போதைய இளம் வீரர் தோனி தேர்வு செய்யப்பட்டார். அப்போதைய இந்திய அணியில் கவுதம் காம்பீர், சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகிய சீனியர் வீரர்கள் இருந்தனர். எனினும் அவர்களுக்கு எல்லாம் கிடைக்காத வாய்ப்பு இளம் வீரர் தோனியை தேடிவந்தது. தோனி கேப்டனாக்கப்பட்டார். தோனி மீது தேர்வாளர்கள் வைத்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக அடுத்த சில மாதங்களில் டி20 உலக கோப்பையை வென்று கொடுத்தார் தோனி.

அதன்பிறகு பல கோப்பைகளையும் வெற்றிகளையும் இந்திய அணிக்கு குவித்து கொடுத்த தோனி, கேப்டன் பதவியிலிருந்து விலகி தற்போது அணியில் வீரராக ஆடிவருகிறார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில், சீனியர் வீரர்கள் இருக்கும்போது தான் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதற்கு என்ன காரணமாக இருக்கலாம் என்பது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய தோனி, எனது நேர்மையும் போட்டியின் போக்கு குறித்த எனது அறிவும்தான், நான் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம் என கருதுகிறேன். அணியின் சீனியர் வீரர்கள் சில நேரங்களில் எனது கருத்தை கேட்கும்போது, நான் தயங்காமல் எனது கருத்தை தைரியமாக தெரிவிப்பேன். எனவே போட்டி குறித்த எனது பார்வையும் அறிவும் நான் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம் என தோனி தெரிவித்தார். 
 

click me!