எனக்கு இது ஒண்ணுதான் ரொம்ப வருத்தமா இருக்கு..! தோனியின் கவலைக்கு காரணம் என்ன..?

First Published May 27, 2018, 2:17 PM IST
Highlights
dhoni reveals his biggest regret of this ipl season


இரண்டு ஆண்டுகால தடைக்கு பின் இந்த சீசனில் தோனி தலைமையில் மீண்டும் களம் கண்ட சென்னை அணி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 

மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இறுதி போட்டியில் ஹைதராபாத் அணியுடன் சென்னை அணி மோதுகிறது. 7வது முறையாக சென்னை அணி இறுதி போட்டியில் ஆடுகிறது. மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் சென்னை அணி உள்ளது. அதேநேரத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும் இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. 

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த சீசனில் ஆடும் சென்னை அணி, சொந்த மைதானமான சென்னை சிதம்பரம் மைதானத்தில் விளையாட முடியாத சூழல் உருவானது. காவிரி போராட்டத்தால் சென்னையில் நடைபெற இருந்த போட்டிகள், புனே மைதானத்திற்கு மாற்றப்பட்டன. 

இரண்டு ஆண்டுகளாக சென்னை அணியின் வருகைக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றமாக அமைந்தது. புனேவிற்கு மாற்றப்பட்டதால் புனேவை சொந்த மைதானமாக பாவித்து சென்னை அணி ஆடியது. சென்னை மைதானத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான ஒரு போட்டி மட்டுமே நடைபெற்றது. மற்ற லீக் போட்டிகள் அனைத்தும் புனேவில் நடந்தன.

சென்னை அணியின் சொந்த மைதானமான சென்னை சிதம்பரம் மைதானத்தில் சென்னை அணியின் போட்டிகள் நடைபெறாதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியதைப்போலவே, வீரர்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இதுதொடர்பான வருத்தத்தை சென்னை கேப்டன் தோனி பகிர்ந்துள்ளார். இன்று இறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில், ஹைதராபாத் மற்றும் சென்னை அணியின் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய தோனி, சென்னையில் ஆட முடியாதது குறித்த வருத்தத்தை பதிவு செய்தார். சொந்த மைதானமான சென்னையில் போட்டிகளை ஆட முடியாதது வருத்தமாக உள்ளது. எனினும் ஒரு போட்டியாவது விளையாடியது மகிழ்ச்சிதான் என தனது வருத்தத்தை பதிவு செய்தார்.
 

click me!