தோனி படைத்த புதிய சாதனை.. வியந்துபோன மற்ற விக்கெட் கீப்பர்கள்

First Published Jul 9, 2018, 9:52 AM IST
Highlights
dhoni new record in t20 cricket


இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், தோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் இரண்டு டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தன. கடைசி போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இரு அணிகளுமே களமிறங்கின.

டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்ய விரும்பியதால், இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி வலுவான அடித்தளத்தை அந்த அணிக்கு அமைத்து கொடுத்தனர். 

பட்லர் 34 ரன்களில் வெளியேறினார். ஜேசன் ராய் 67 ரன்களில் அவுட்டானார். அதன்பிறகு அலெக்ஸ் ஹேல்ஸை தவிர மற்ற யாரும் சரியாக ஆடவில்லை. முதல் 10 ஓவரில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்தை அடுத்த 10 ஓவரில் இந்திய பவுலர்கள் கட்டுப்படுத்தினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை குவித்தது. 

199 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா அதிரடியா ஆடி சதமடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். இதையடுத்து 2-1 என இந்திய அணி டி20 தொடரை வென்றது. 

இந்த போட்டியில் தோனி புதிய சாதனை ஒன்றை படைத்தார். இந்த போட்டியில், ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், இயன் மோர்கன், பேர்ஸ்டோ, பிளன்கெட் ஆகியோரின் கேட்ச்களை தோனி பிடித்தார். இந்த போட்டியில் 5 கேட்ச்களை பிடித்ததன் மூலம், ஒரு டி20 போட்டியில் அதிகமான கேட்ச்களை பிடித்த வீரர் என்ற புதிய சாதனையை தோனி படைத்துள்ளார்.

தோனிக்கு அடுத்த இடத்தில் 4 கேட்ச்களை பிடித்த ஆடம் கில்கிறிஸ்ட் உள்ளார். அவர் இரண்டு முறை 4 கேட்ச்களை பிடித்துள்ளார். 

நேற்று 5 கேட்ச்கள் பிடித்தன் மூலம் டி20 போட்டிகளில் 54 கேட்ச்களை பிடித்துள்ளார் தோனி. சர்வதேச டி20 போட்டிகளில் 50 கேட்ச்களை பிடித்துள்ள முதல் விக்கெட் கீப்பர் தோனி தான்.

டி20 போட்டியில் அதிகமான ஸ்டம்பிங்குகள் செய்த விக்கெட் கீப்பரும் தோனிதான். தோனி 33 ஸ்டம்பிங்குகளுடன் முதலிடத்திலும் பாகிஸ்தானின் காம்ரான் அக்மல் 32 ஸ்டம்பிங்குகளுடன் இரண்டாமிடத்திலும் உள்ளனர். டி20 போட்டியில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்தவரும் தோனிதான். இதுவரை 54 கேட்ச்கள் மற்றும் 33 ஸ்டம்பிங்குகள் என 87 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்துள்ளார். 
 

click me!