
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பில்லியர்ட்ஸ் விளையாட்டு வீரர் பங்கஜ் அத்வானி ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம பூஷண் விருதை வழங்கி சிறப்பித்தார்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் பில்லியர்ட்ஸ் விளையாட்டு வீரர் பங்கஜ் அத்வானி ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தோனி, இராணுவ உடையணிந்து பதக்கத்தையும், விருதையும் பெற்றுக் கொண்டு, ராணுவ முறைப்படி குடியரசுத் தலைவருக்கு வணக்கம் தெரிவித்தார்.
அப்போது, பார்வையாளர்கள் பலத்த கைதட்டல்களை அவருக்கு அளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தோனியின் மனைவி சாக்ஷியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நாட்டுப்புற கலைஞர் சாரதா சின்ஹா, ஓவியக் கலைஞர் இலட்சுமண் பாய், இந்தியாவுக்கான முன்னாள் ரஷிய தூதர் அலெக்சாண்டர் கடாகின் (மரணத்துக்குப் பின்) ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அளிக்கப்பட்டது.
குஜராத்தைச் சேர்ந்த நடிகர் மனோஜ் ஜோஷி, தமிழக நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன், கர்நாடகத்தைச் சேர்ந்த சூஃபி பாடகர் இப்ராஹிம் நபிசாஹிப் சுதார், வன உயிர் ஆர்வலர் ரோமுலஸ் விடேகர், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த கல்வியாளர் ஏ.ஷாகியா,
வர்த்தகம், தொழில்துறையில் சிறப்பாக பங்காற்றிய பிலிப்பின்ஸை சேர்ந்த ஜோஸ் மா ஜாய், மலேசியாவைச் சேர்ந்த நடன கலைஞர் தாடுக் ராம்லி இப்ராஹிம் உள்ளிட்ட 38 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவைத் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.