புணே அணியை துவம்சம் செய்து டெல்லி அணி ஆர்ப்பரிப்பு…

First Published May 13, 2017, 11:23 AM IST
Highlights
Delhi team march against Pune Warriors


ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 52-ஆவது லீக் ஆட்டத்தில் புணே அணியை துவம்சம் செய்தது டெல்லி அணி.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 52-ஆவது லீக் ஆட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி அணி, முதல் ஓவரின் 4 பந்துகளில் 2 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த சஞ்சு சாம்சனின் விக்கெட்டை இழந்தது. இந்த முதல் விக்கெட்டை பென் ஸ்டோக்ஸ் எடுத்தார்.

பின்னர் கருண் நாயருடன், ஷ்ரேயஸ் ஐயர் இணைந்தார். ஷ்ரேயஸ் 3 ஓட்டங்களில் நடையைக் கட்ட, ரிஷப் பந்த் களம் புகுந்தார். வாஷிங்டன் சுந்தர் வீசிய 4-ஆவது ஓவரில் கருண் நாயர் இரு பவுண்டரிகளை விரட்ட, அதே ஓவரில் பந்த் தன் பங்குக்கு ஒரு சிக்ஸரை விளாசினார்.

தொடர்ந்து அதிரடி காட்டிய கருண் நாயர், பென் ஸ்டோக்ஸ் வீசிய 5-ஆவது ஓவரில் 3 பவுண்டரிகளை விரட்ட, ஷர்துல் தாக்குர் வீசிய அடுத்த ஓவரில் ரிஷப் பந்த் 3 பவுண்டரிகளை விளாசினார். இதனால் 6 ஓவர்களில் 54 ஓட்டங்களை எட்டியது டெல்லி.

பிறகு ஆடம் ஸம்பா வீசிய 9-ஆவது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசிய கையோடு ஆட்டமிழந்தார் ரிஷப் பந்த். அவர் 22 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்கள் எடுத்தார்.

இதனையடுத்து வந்த சாமுவேல்ஸ், ஷர்துல் தாக்குர் பந்துவீச்சில் இரு சிக்ஸர்களை விளாசினாலும் அவருடைய அதிரடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 21 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 27 ஓட்டங்கள் சேர்த்து தோனியிடம் கேட்ச் ஆனார்.

இதையடுத்து களம்புகுந்த கோரே ஆண்டர்சன் 3 ஓட்டங்களில் நடையைக் கட்ட, கருண் நாயர் 37 பந்துகளில் அரை சதம் கண்டார். இதன்பிறகு கம்மின்ஸ் 6 பந்துகளில் 11 ஓட்டங்கள் சேர்த்து வெளியேற, ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் சிக்ஸரை விளாச முயன்ற கருண் நாயர், பவுண்டரி எல்லையில் நின்ற உனட்கட்டிடம் கேட்ச் ஆனார். அவர் 45 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் எடுத்தார்.

முடிவில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்கள் குவித்தது டெல்லி. அமித் மிஸ்ரா 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

புணே தரப்பில் ஜெயதேவ் உனட்கட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய புணே அணியில் தொடக்க வீரர் ரஹானே, டெல்லி கேப்டன் ஜாகீர்கான் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஸ்டெம்பை பறிகொடுத்த பிறகு திரிபாதி 7 ஓட்டங்களில் நடையைக் கட்டினார்.

பின்னர், கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்துடன் இணைந்தார் மனோஜ் திவாரி. இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 38 ஓட்டங்கள் சேர்த்தது. ஸ்மித் 32 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

பின்னர் மனோஜ் திவாரியுடன் இணைந்தார் பென் ஸ்டோக்ஸ். இந்த ஜோடி அதிரடியாக ஆட, புணே 5 ஓவர்களில் 52 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. பென் ஸ்டோக்ஸ் 25 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 33 ஓட்டங்கள் சேர்த்து வெளியேரினார்.

பின்னர் வந்த தோனி 5, கிறிஸ்டியான் 3 ஓட்டங்கள் என சொற்பமாக ஆட்டமிழந்தனர்.
இதனால் கடைசி ஓவரில் 25 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.

பேட் கம்மின்ஸ் வீசிய அந்த ஓவரின் முதல் இரு பந்துகளில் மனோஜ் திவாரி சிக்ஸரை விளாசினார். ஆனால், அடுத்த இரு பந்துகளில் ஓட்டங்கள் எடுக்க முடியவில்லை.

ஐந்தாவது பந்தில் 4 ஓட்டங்கள் கிடைக்க, கடைசிப் பந்தில் திவாரியை போல்டாக்கினார் கம்மின்ஸ். இதனால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது புணே. திவாரி 60 ஓட்டங்கள் குவித்தார்.

டெல்லி தரப்பில் ஜாகீர்கான் 2 விக்கெட்டுகளையும், முகமது சமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

கருண் நாயர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதனால், புணே அணி 16 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் இருந்தாலும், அதன் ரேட் மைனஸில்தான் உள்ளது. புணே தனது கடைசி ஆட்டத்தில் பஞ்சாபை வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். இல்லையேல் புணே வெளியேறும்.

tags
click me!