தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு என் வெற்றியை சமர்ப்பிக்கிறேன்…

First Published Dec 19, 2016, 12:28 PM IST
Highlights


புது தில்லி:

தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல், மற்றும் அவர்களுக்கு எதிரான தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று விஜேந்தர் சிங் கூறினார்

உலக குத்துச் சண்டை அமைப்பின் (டபிள்யுபிஓ) ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் பட்டத்துக்கான போட்டியில்  இந்தியாவின் விஜேந்தர் சிங் தான்சானியாவின் பிரான்சிஸ் செக்காவை வீழ்த்தி  சனிக்கிழமை பட்டம் வென்றார்.

இதன்மூலம் தொழில்முறை குத்துச்சண்டையில் தான் களமிறங்கிய 8 போட்டிகளிலுமே விஜேந்தர் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். அதில் 7 போட்டிகளில் நாக் அவுட் முறையில் வென்றது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நடப்பு சாம்பியன் விஜேந்தர்-பிரான்சிஸ் இடையேயான போட்டி, 10 சுற்றுகளாக நடைபெற இருந்தது. எனினும், 3-ஆவது சுற்றிலேயே செக்காவை நாக் அவுட் செய்தார் விஜேந்தர். எனவே, அதுவரை பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் விஜேந்தர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனால் ஆட்டம் 10 நிமிடங்களுக்குள்ளாகவே நிறைவடைந்தது.

வெற்றிக்குப் பிறகு பேசிய விஜேந்தர் சிங் கூறியதாவது: “இந்தப் போட்டிக்காக 2 மாதங்களாக மான்செஸ்டரில் பயிற்சி எடுத்துக்கொண்டேன். இந்த வெற்றிக்காக உழைத்த எனது பயிற்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். போட்டிக்கு முன்பான நிகழ்ச்சியில் பிரான்சிஸ் அதிகமாக பேசினார். களத்தில் வைத்து அவருக்கு எனது குத்துகளின் மூலம் பதில் சொல்ல நினைத்தேன். அதைச் செய்துவிட்டேன்.

எனது இந்த வெற்றியை, தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல், மற்றும் அவர்களுக்கு எதிரான தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று விஜேந்தர் சிங் கூறினார்.

 

tags
click me!