கோலியின் மானத்தை காக்க பாடுபட்ட இங்கிலாந்து வீரர்!! சுவாரஸ்ய சம்பவம்

First Published Aug 3, 2018, 11:50 AM IST
Highlights
dawid malan missed two catches for virat kohli


இந்தியா இங்கிலாந்து இடையேயான டி20 தொடரை இந்திய அணியும் ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணியும் வென்றன. இதையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது. 

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ரன்கள் எடுத்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, விராட் கோலியின் அபார சதத்தால் 274 ரன்கள் சேர்த்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் விழ மறுபுறம் பொறுப்புடன் ஆடி சதமடித்த விராட் கோலி, 149 ரன்கள் குவித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். 

இதுதான் இங்கிலாந்து மண்ணில் கோலியின் முதல் டெஸ்ட் சதம். கடந்த 2014ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளில் 10 இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே மொத்தம் 134 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் கோலி. அதனால் இம்முறை இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக ஆட வேண்டும் என்ற முனைப்பில் கோலி இருந்தார். மேலும் கடந்தகால எதிர்மறையான நினைவுகளை மாற்ற கோலி சிறப்பாக ஆடுவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடமும் இருந்தது. 

அதற்கேற்ற வகையில், சிறப்பாக ஆடி, தனி ஒருவனாக அணியை மீட்டதோடு, இங்கிலாந்து மண்ணில் முதல் டெஸ்ட் சதத்தையும் பதிவு செய்தார் கோலி.

கோலி சதமடிக்க இங்கிலாந்து வீரர் டேவிட் மாலனும் ஒரு காரணம். இரண்டாவது ஸ்லிப்பில் நின்ற மாலன், இரண்டு முறை கோலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். கோலி 21 ரன்கள் இருக்கும்போது ஒரு கேட்ச் வாய்ப்பு கிடைத்தது. அதை மாலன் தவறவிட்டார். பின்னர் அரைசதம் கடந்தபிறகு 51 ரன்கள் எடுத்த நிலையில், கோலி அடித்த பந்து மீண்டும் மாலனிடம் சென்றது. அதையும் தவறவிட்டார் மாலன். அந்த இரண்டு வாய்ப்புகளையும் நன்கு பயன்படுத்திக்கொண்ட கோலி, சதமடித்ததோடு அணியையும் மீட்டெடுத்து நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். 

அந்த கேட்ச் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி மாலன் பிடித்திருந்தால் போட்டி வேறு மாதிரியாக இருந்திருக்கும். கோலி போன்ற வீரர்களின் கேட்ச் வாய்ப்பை தவறவிட்டால் என்ன நடக்கும் என்பதை கோலி இங்கிலாந்துக்கு காட்டிவிட்டார். அந்த வகையில், கோலியின் சதத்திற்கு மாலன் மிக முக்கிய காரணம். 
 

click me!