ஜடேஜாவால் தோனிக்கு வந்த பிரச்னை!! இனியாவது நிறுத்துவாரா தோனி..?

First Published May 4, 2018, 2:01 PM IST
Highlights
csk fans wanted dhoni to reduce preference given to jadeja


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஜடேஜாவின் சொதப்பல்கள் தொடர்ந்து வருகின்றன.

சென்னை அணி தடை செய்யப்பட்டிருந்த இரண்டு ஆண்டுகளை தவிர மற்ற அனைத்து ஐபிஎல் சீசன்களிலும் சென்னை அணிக்காக தோனியின் தலைமையின் கீழ் ஆடிவருகிறார் ரவீந்திர ஜடேஜா. நல்ல ஸ்பின் பவுலர் மற்றும் பேட்ஸ்மேன். பேட்டிங், பவுலிங்கை விட அவர் ஃபீல்டிங்கில் தான் கைதேர்ந்தவர். மிகச்சிறந்த ஃபீல்டர்.

சிறந்த ஃபீல்டர் என்பதாலேயே தோனியின் ஆஸ்தான வீரராக வலம்வருகிறார் ஜடேஜா. தோனி, இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தபோதும் சரி, ஐபிஎல் தொடரிலும் சரி.. நல்ல வீரர் என்ற முறையில் ஜடேஜாவை சரியான முறையில் பயன்படுத்துவார் தோனி.

ஆனால், இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங், பவுலிங்கில் பெரிதாக சோபிக்காத ஜடேஜா, கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங்கிலும் கோட்டைவிட்டார். சுனில் நரைனுக்கு அடுத்தடுத்து இரண்டு கேட்ச்களை ஜடேஜா விட்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்து, கடைசி ஓவர்களோ அல்லது நடு ஓவர்களோ, அடித்து ஆடக்கூடிய பிராவோவிற்கு முன்னதாகவே ஜடேஜா களமிறக்கப்பட்டார். ஆனால் அந்த வாய்ப்புகளை ஜடேஜா பயன்படுத்திக்கொள்ளவில்லை. 8 போட்டிகளில் பேட்டிங் ஆடி வெறும் 59 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அந்த போட்டிகளில் ஜடேஜாவிற்கு முன்னதாக பிராவோவை இறக்கியிருந்தால் ரன்னாவது அதிகமாயிருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

அதேபோல, பவுலிங்கிலும் ஜடேஜாவிற்கு தோனி நன்றாகவே வாய்ப்பு கொடுத்தார். ஆனால் பவுலிங்கிலும் சோபிக்கவில்லை. இதுவரை சென்னை அணி ஆடியுள்ள 9 போட்டிகளில் 7ல் ஜடேஜா பந்துவீசியுள்ளார். 18 ஓவர்களை வீசியுள்ள அவர், வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார். ஆனால், 3 போட்டிகளில் 5.3 ஓவர்கள் மட்டுமே பந்துவீசியுள்ள கரண் சர்மா, 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஜடேஜாவை விட கரண் சர்மா நன்றாக பந்துவீசியுள்ளார். ஆனால், ஜடேஜாவிற்கே முக்கியத்துவம் கொடுத்தார் தோனி.

பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சோபிக்கவில்லை என்றாலும், ஃபீல்டிங்கில் வழக்கம்போல அசத்திவந்த ஜடேஜா, நேற்றைய கொல்கத்தா போட்டியில் அதற்கும் ஆப்பு வைத்துக்கொண்டார். தனக்கு தானே வெடி வைத்தாற்போல, அவரது ஒட்டுமொத்த ஆட்டத்திறனையும் கேள்விக்குள்ளாக்கும் நிலையை ஏற்படுத்திவிட்டார். சுனில் நரைனுக்கு அடுத்தடுத்து இரண்டு எளிய கேட்ச்களை தவறவிட்டார் ஜடேஜா. 

இதனால் தோனி கடும் அதிருப்தி அடைந்தார். அவர் மீது தோனி வைத்திருந்த நம்பிக்கையையும் அவருக்கு அளித்த முக்கியத்துவத்தையும் கெடுத்துக்கொண்டார். 

பிராவோவிற்கு முன்னதாக களமிறக்கி பேட்டிங்கில் ஜடேஜாவிற்கு முன்னுரிமை அளித்த தோனி, பவுலிங்கிலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தார். இந்நிலையில், ஜடேஜாவிற்கு தோனி முக்கியத்துவம் அளிப்பது தொடர்பான விமர்சனங்கள் எழுந்துள்ளன. தொடர்ந்து சொதப்பிவரும் ஜடேஜாவிற்கு முக்கியத்துவம் அளிப்பதை தோனி இனியாவது நிறுத்த வேண்டும் என்று சென்னை அணியின் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.

ஜடேஜாவிற்கு அளித்த முக்கியத்துவத்தை கைவிடுவாரா தோனி? பொறுத்திருந்து பார்ப்போம்.
 

click me!