
ஐபிஎல் 12வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. அடுத்த சீசனுக்கான ஏலம் அடுத்த மாதம் 18ம் தேதி ஜெய்ப்பூரில் நடக்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக அனைத்து ஐபிஎல் அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் கழட்டிவிடும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.
கழட்டிவிடப்பட்ட வீரர்களில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த யுவராஜ் சிங்கை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விடுவித்துள்ளது. கடந்த சீசனில் யுவராஜ் சிங் படுமோசமாக ஆடினார். ஒரு போட்டியில் கூட சரியாக ஆடவில்லை. 8 போட்டிகளில் ஆடி வெறும் 65 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் அதிருப்தியடைந்த பஞ்சாப் அணி நிர்வாகம் அவரை விடுவித்தது.
இதையடுத்து யுவராஜ் சிங் தோனியுடன் இணைந்து ஆடுவதை மீண்டும் பார்க்க விரும்பிய ரசிகர்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யுவராஜ் சிங்கை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் மிகத்தீவிரமாக வலியுறுத்தினர்.
தோனி தலைமையில் இந்திய அணி 2007ல் டி20 உலக கோப்பையை வென்றபோதும் 2011ல் ஒருநாள் உலக கோப்பை தொடரை வென்றபோதும் அவற்றில் எல்லாம் யுவராஜ் சிங் முக்கிய பங்காற்றினார். 2011 உலக கோப்பையை இந்திய அணி வென்றபோது தொடர் நாயகன் யுவராஜ் தான். அந்த தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் யுவராஜ் சிங்கின் பங்களிப்பு அளப்பரியது. ஒரு முழு ஆல்ரவுண்டராக ஜொலித்தார் யுவராஜ்.
ஆனால் புற்றுநோய்க்கு பிறகு நொடிந்தார் யுவராஜ். அவரது ஆட்டமும் முன்புபோல் இல்லை. எனினும் தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் கிரிக்கெட் ஆடிவரும் யுவராஜ் சிங், கடந்த சீசனில் பஞ்சாப் அணியில் சோபிக்கவில்லை. அதனால் அந்த அணி அவரை விடுவித்தது. இதையடுத்து ரசிகர்கள் யுவராஜ் சிங்கை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில், சிஎஸ்கே அணியும் அவரை எடுக்கும் முனைப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
நடப்பு சாம்பியனான சென்னை அணி, தோனி, பிராவோ, ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ், ரெய்னா, ராயுடு, ஹர்பஜன் சிங் என 30 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய வீரர்களை கடந்த சீசனில் பெற்றிருந்ததால் வயதானவர்களை கொண்ட அணி என விமர்சிக்கப்பட்டது. ஆனால் தோனி, ராயுடு, வாட்சன், பிராவோ என ஒவ்வொருவருமே இக்கட்டான கட்டத்தில் தங்களது அனுபவத்தால் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை பெற்றுக்கொடுத்தனர்; தொடர்ந்து வெற்றிகளை பெற்றுக்கொடுக்க கூடியவர்கள். அந்த வகையில் அடுத்த சீசனில் யுவராஜ் சிங்கும் அணியில் இணைய இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.