பாண்டிங் இப்படி பேசிகிட்டே இருக்க வேண்டியதுதான்!!

By karthikeyan VFirst Published Dec 13, 2018, 11:37 AM IST
Highlights

பெர்த்தில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். 
 

பெர்த்தில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஸ்மித்தும் வார்னரும் இல்லாத ஆஸ்திரேலிய அணி என்பதால் எளிதில் வீழ்த்திவிடலாம் என்று பரவலாக கருத்து இருந்த நிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையான நெருக்கடி கொடுத்தனர். இந்திய அணிக்கு வெற்றியை அவ்வளவு எளிதில் தாரைவார்த்துவிடவில்லை. 

முதல் போட்டியில் இந்திய அணி கடைசி நேர பரபரப்பில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரண்டாவது போட்டி பெர்த்தில் நாளை தொடங்குகிறது. 

ஸ்மித்தும் வார்னரும் இல்லாததாலும் ஆஸ்திரேலிய அணி நிலைகுலைந்திருப்பதாலும் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்வதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் சிலரே தெரிவித்திருந்த நிலையில், சொந்த மண்ணில் ஆடுவதாலும் ஆஸ்திரேலிய வீரர்கள் முழு ஆட்டத்திறனையும் வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையிலும் ஆஸ்திரேலிய அணிக்கு தொடரை வெல்லும் வாய்ப்பு இருப்பதாக பாண்டிங் முன்பே தெரிவித்திருந்தார். ஆனால் எளிதாக வெற்றியை பெறவில்லை என்றாலும் இந்திய அணி போராடி வெற்றியை பெற்றுவிட்டது. 

இந்திய அணி முதல் போட்டியை வென்றுள்ள நிலையில், பெர்த் டெஸ்ட் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாண்டிங், பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது. இந்த போட்டியில் இந்திய அணியை காட்டிலும் ஆஸ்திரேலிய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சரியாக ஆடவில்லை. ஆனால் தோற்றுவிட்டதால், இந்திய அணி முழுத் திறமையும் வெளிப்படுத்தியதாக அர்த்தமில்லை. அவர்களும் பெரிதாக ஆடவில்லை. ஆனால் அந்த வெற்றிக்கு தகுதியானவர்கள். முதல் போட்டியில் கிடைத்த பாசிட்டிவான விஷயங்களை எடுத்துக்கொண்டு இரண்டாவது போட்டியில் மேலும் சிறப்பாக ஆடவேண்டும் என்று பாண்டிங் அறிவுறுத்தியுள்ளார். 
 

click me!