தோனியை காட்டி ரசிகர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் சிஎஸ்கே? வியாபார யுக்தி இதுதான்!

தோனி களமிறங்கும்போது கடவுள்போல் ஆரவாரமாக கொண்டாடுவது, மேட்ச் தோத்தாலும் 'தல தோனி 2 சிக்சர் அடித்து விட்டார் அதுவே போதும்' என சொல்லி புளகாங்கிதம் அடைவது என தனி உலகத்தில் வாழும் சிஎஸ்கே ரசிகர்களை நாடே அறியும்.


CSK MS Dhoni Fans: ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 6 விக்கெட் இழந்து 183 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 51 பந்தில் 77 ரன்கள் விளாசினார். பின்பு பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

சிஎஸ்கே தோல்வி 

Latest Videos

சிஎஸ்கேவின் முக்கிய வீரர்கள் ரச்சின் ரவீந்திரா (3 ரன்), டெவான் கான்வே (13), ருத்ராஜ் கெய்க்வாட் (5), ஷிவம் துபே (18) சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இறுதிவரை களத்தில் இருந்த விஜய் சங்கரும் (54 பந்துகளில் 127 ஸ்டிரைக் ரேட்டுடன் 69 ரன்), தோனியும் (26 பந்தில் 115 ஸ்டிரைக் ரேட்டுடன் 30 ரன்) கொஞ்சம் கூட வெற்றி பெற முயற்சி செய்யாமல் மந்தமாக விளையாடினாரகள். ஒட்டுமொத்தமாக பேட்டிங்கில் சொதப்பியதே அடைந்ததே தோல்விக்கு முக்கிய காரணமாகும்.

தோனியால் விளையாடுவது கஷ்டம் 

11வது ஓவரில் இருந்து பேட்டிங் செய்யும் தோனியால் ஓவருக்கு 10 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லையா? என ரசிகர்கள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகின்றனர். அவர்களது கேள்வி நியாயமாக இருந்தாலும் தோனிக்கு வயது 43 என்பதை அனைவரும் ஒத்துக் கொள்ள வேண்டும். ஒருவர் 43 வயதில் 10 ஓவருக்கு மேல் பேட்டிங் செய்து அதிக ரன்களை ஓடி எடுத்து அணியை வெற்றி பெற வைப்பது எல்லாம் ஏதாவது அதிசயம் நடந்தால் தான் உண்டு.

ஏனெனில் ஒரு விளையாட்டு வீரருக்கு 40 வயதுக்கு பிறகு உடல்நிலை ஒத்துழைப்பு கொடுப்பது மிகவும் கஷ்டம். ''தோனிக்கு முழங்கால் முன்புபோல் சரியில்லை. அவரால் நீண்டநேரம் களத்தில் நிற்க முடியாது'' என சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கே இதை தெளிவாக சொல்லி விட்டார். பிறகு ஏன் தோனி சிஎஸ்கே அணியில் தொடர்ந்து விளையாடுகிறார்? என்ற நீங்கள் எழுப்பும் நியாயமான கேள்வி எனக்கு புரியாமல் இல்லை. 

சிஎஸ்கே நிர்வாகத்துக்கு தான் தோனி தேவை

இந்த இடத்தில் தான், சிஎஸ்கே அணிக்கு தோனி தேவை இல்லை; சிஎஸ்கே நிர்வாகத்துக்கு தான் தோனி தேவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிஎஸ்கே அணியை ஆதரிப்பவர்களில் கிட்டத்தட்ட 99% பேர் தோனியின் ரசிகர்கள் என்பதை விட வெறியர்கள் என்றே சொல்லலாம். எப்படி பல படங்கள் தோல்வியை தழுவினாலும் நடிகர் அஜித்குமாரை விட்டுக்கொடுக்காத ஒரு கூட்டம் இருக்கிறதோ, அதே போல் ஒரு கூட்டம் தான் தோனிக்கும் இருக்கிறது.

தோனி களமிறங்கும்போது கடவுள்போல் ஆரவாரமாக கொண்டாடுவது, அவர் ஒன்றிரண்டு சிக்சர் அடித்தாலே ஏதோ மேட்ச் வெற்றி பெற்றதுபோல் துள்ளிக்குதிப்பது, மேட்ச் தோத்தாலும் 'தல தோனி 2 சிக்சர் அடித்து விட்டார் அதுவே போதும்' என சொல்லி புளகாங்கிதம் அடைவது என தனி உலகத்தில் வாழும் சிஎஸ்கே ரசிகர்களை சாரி.. சாரி தோனி வெறியர்களை நாடே நன்கு அறியும்.

டெல்லியை வெற்றி பெற வைத்த தோனி-விஜய் சங்கர்! முட்டுகொடுத்த ருத்ராஜ்! ரசிகர்கள் கோபம்!

சிஎஸ்கே நிர்வாகத்தின் வியாபார யுக்தி 

ரசிகர்களின் இத்தகைய அதீத அன்புக்கு தோனி உரித்தானவர் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. கிரிக்கெட் உலகில் தோனி படைத்த சாதனைகளே இதற்கு சாட்சி. ஆனால் எல்லாவ‌ற்றுக்கும் ஒரு காலம் இருக்கிறது அல்லவா? விளையாட்டு மட்டுமல்ல சினிமா, அரசியல் என எந்த துறையாக இருந்தாலும் புகழ்பெற்ற ஒருவர் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு வெளியே செல்வதும், அந்த இடத்தில் மற்றொருவரை வைத்து போற்றுவதும் தானே வாடிக்கை.

'தோனிக்கு எத்தனை வயதானால் என்ன? அவர் விளையாட வேண்டும். அவர் ரன்கள் அடிக்க வேண்டும்' என்று கூறி  அறியாமையின் உச்சத்தில் இருக்கும் ரசிகர்களை வைத்து சிஎஸ்கே நிர்வாகம் பணம் சம்பாதிக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. தோனி 43 வயதை தொட்டு விட்டதால் கடந்த சீசன் முடிவிலேயே தோனியை ஓய்வு பெற வைத்து இருக்கலாம். இல்லை உங்களுக்கு பதிலாக இளம் வீரர்கள் இடம்பெறட்டும் என்று சிஎஸ்கே நிர்வாகம் கூறி இருக்கலாம்.

ரசிகர்களை மகிழ்விக்கும் போர்வையில்...

ஆனால் தங்க முட்டையிடும் வாத்தை விட்டுக்கொடுக்க யாருக்கு தான் மனசு வரும். ஆகையால் தோனியை வைத்து ரசிகர்களுக்கு ஆசைகாட்டி ஒவ்வொரு போட்டியிலும் கோடி, கோடியாக கல்லா கட்டுகிறது சிஎஸ்கே நிர்வாகம். தோனி ஒருவரால் மட்டுமே ரசிகர்கள் மேட்ச் பார்க்க வருகிறார்கள் என்பதை கட்சிதமாக புரிந்து கொண்ட சிஎஸ்கே, அவரை கடைசி 2 ஓவர்களில் விளையாட வைத்து ரசிகர்களை மகிழ்விக்கும் போர்வையில் காசை அல்லுகிறது.

ஏனெனில் சிஎஸ்கே போட்டி டிக்கெட் விலை குறைந்தது ரூ.2,000ல் இருந்து தொடங்கி அதிகப்பட்சமாக ரூ.15,000 வரை உள்ளது. தோனி விளையாடுகிறார் என்றால் 15,000 ரூபாய் என்றால் என்ன, 50,000 ரூபாய் என்றால் என்ன கண்ணைமூடி டிக்கெட்டை போட்டு மேட்ச் பார்க்க வந்து விடுகிறார்கள் ரசிகர்கள். தீபாவளி, பண்டிகை காலத்தில் ரயில்களில் கூட டிக்கெட் கிடைக்கும். ஆனால் சிஎஸ்கே மேட்ச் பார்க்க உங்களுக்கு டிக்கெட் கிடைக்காது. ஏனெனில் டிக்கெட் விற்பனை தொடங்கும் சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விடும்.

கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை 

இதுமட்டுமின்றி, தோனியை பார்த்தால் தான் இந்த வாழ்க்கை முழுமையடையும் என்று கருதும் சில சிஎஸ்கே ரசிகர்கள் கள்ளச்சந்தையில் ரூ.50,000, ரூ.80,000 என பன்மடங்கு அதிக விலைக்கு விற்கப்படும் டிக்கெட்டுகளை வாங்கி தல தரிசனம் பார்க்க வந்து விடுகின்றனர். ஒருவேளை இந்த இடத்தில் தோனி இல்லையென்றால் இப்படி கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்குமா? இல்லை சேப்பாக்கம் மைதானம் தான் நிரம்பி வழியுமா? இதனால் தான் தோனியே வெளியே செல்லுகிறேன் என்று கூறினாலும், சிஎஸ்கே நிர்வாகம் அவரை தாங்கிப் பிடித்து வைத்திருப்பதற்கு காரணம்.

ஏன் சென்னையில் மட்டுமா ரசிகர்கள் இப்படி இருக்கிறார்கள்? மற்ற இடங்களில் இல்லையா? என நீங்கள் கேட்கலாம். தோனிக்கு இருப்பதுபோல் கோலிக்கு, ரோகித் சர்மாவுக்கு இப்படி வெறித்தனமாக ரசிகர்கள் இல்லை என்பதே உண்மை. ஏனெனில் மும்பையில் ரோகித் சர்மா போன பிறகு ஹர்திக் பாண்ட்யாவை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆர்சிபியில் கோலிக்கு பிறகு மற்ற வீரர்களை ஏற்றுக் கொண்டனர். மற்ற அணிகளின் வீரர்கள் தங்களுக்கு பிடித்தமான வீரர்கள் போனால் என்ன? மற்ற வீரர்களை வைத்து அணி வெற்றி பெற்றால் போதும் என நினைக்கின்றனர். 

சிஎஸ்கே ரசிகர்கள் புரிந்து கொள்வார்களா?

ஆனால் இங்கு தான் சிஎஸ்கே என்றால் அது தோனி தான். தோனி இல்லாவிட்டால் சிஎஸ்கே இல்லை என்ற மனநிலை கொண்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இதை புரிந்து கொண்ட சிஎஸ்கே நிர்வாகம் தோனியை பகடைக்காயாக வைத்து பணம் சம்பாதிக்கிறது. நம்முடைய சின்ன வயதில் அம்மா நிலாவை காட்டி (ஆனால் இப்போது செல்போனை காட்டுகிறார்கள்) சோறு ஊட்டுவார்கள். இதேபோல் தான் சிஎஸ்கே நிர்வாகம் ஒவ்வொரு போட்டியிலும் தோனியை வைத்து ஆசைகாட்டி கல்லா கட்டி விடுகிறது. 

சிஎஸ்கேவின் இந்த வியாபார யுக்தியில் தோனியும் ஒரு கூட்டாளியாக இருக்கிறார் என்பது தான் உண்மை. ஐபிஎல் தொடரே மிகப்பெரும் வியாபாரம் என்ற போதிலும், தோனியை காட்சி பொருளாக வைத்து சிஎஸ்கே நிர்வாகம் தனது வியாபாரத்தை பன்மடங்கு பலப்படுத்தி விட்டது. இதை சிஎஸ்கே ரசிகர்கள் புரிந்து கொள்வார்களா?

தோனி இருந்தும் ஜெயிக்க முடியவில்லை - 25 ரன்களில் சிஎஸ்கே தோல்வி; 15 ஆண்டுகளுக்கு பிறகு DC வெற்றி!

click me!