
சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயம் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஐபிஎல் தொடரிலிருந்து விலகி ஓய்வெடுக்க உள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்கிய சென்னை அணி, சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்றுவருகிறது. தோனி, வாட்சன், கேதர் ஜாதவ், பிராவோ, ஹர்பஜன் சிங் என சென்னை அணியின் முக்கிய வீரர்கள் 30 வயதை கடந்தவர்கள். இதை வைத்து நெட்டிசன்கள் கிண்டலும் செய்துவந்தனர்.
இந்த தொடர் தொடங்கியதிலிருந்தே சென்னை அணிக்கு சோதனை மேல் சோதனையாக இருந்தது. டுபிளெசிஸ் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேதர் ஜாதவ், முதல் போட்டியிலேயே ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்தே விலகினார்.
தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி நிகிடி, அவரது தந்தை இறந்துவிட்டதால் தென்னாப்பிரிக்கா சென்றுவிட்டார். ரெய்னாவுக்கு காயம் ஏற்பட்டு, ஒரு போட்டியில் மட்டும் ஓய்வெடுத்தார். முதுகுவலியால் அவதிப்பட்ட தோனி, உடனடியாக உடல்நலம் தேறினார்.
இப்படியாக வீரர்கள் அடுத்தடுத்து காயத்தால் அவதிப்பட, அணியில் இருக்கும் வீரர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்கும் மேற்பட்டோர்; அதனால் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம் என தோனியே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் சாஹருக்கு காயம் ஏற்பட்டதால், பாதியிலேயே சென்றுவிட்டார். காயம் ஏற்பட்டதால், இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டியிருப்பதால், இரண்டு வாரங்களுக்கு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
ஆனால், தந்தை இறப்பிற்காக சென்ற, லுங்கி நிகிடி, ஐபிஎல்லில் கலந்துகொள்ள சென்னை திரும்புகிறார். நிகிடியை சேர்ப்பதாக இருந்தால், ஒரு வெளிநாட்டு வீரரை நீக்க வேண்டும். அப்படி செய்தால் ஒரு பேட்ஸ்மேனை இழக்க நேரிடும். இது தோனிக்கும் சென்னை அணிக்கும் நெருக்கடியாகவே இருக்கும்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.