வீர மரணம் அடைந்த 40 ராணுவத்தினர் குழந்தைகளின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்கிறேன் !! வீரேந்திர சேவாக் அதிரடி அறிவிப்பு….

By Selvanayagam PFirst Published Feb 17, 2019, 7:04 AM IST
Highlights

புல்வாமா தாக்குதலில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்கள் குழந்தைகளின் படிப்பு செலவு முழுவதையும் தான் ஏற்றுக் கொள்வதாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அதிரடியாக அறிவித்துள்ளார். உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நாம் எது செய்தாலும் போதுமானதாக இருக்காது என்றாலும், என்னால் முடிந்த இந்த உதவியை செய்கிறேன் என சேவாக் தெரிவித்துள்ளார்.
 

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம், அவந்திபோரா நெடுஞ்சாலையில் துணை ராணுவப்படையினர் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி ஒருவன் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினான். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் இந்தக் கொடூர செயலுக்கு நாடுமுழுவதும் கண்டனம் எழுந்துள்ளது. கிரிக்கெட் வீரர்கள் விராட்கோலி, கவுதம் கம்பிர், வீரேந்திர சேவாக், முகமது கைப், ஷிகர் தவண் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஒவ்வொரு மாநில அரசும் வீரமரணம் அடைந்த வீரர் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தால், அவருக்கு நிவாரணத் தொகையை அறிவித்து வருகின்றன. 

தமிழகத்தில் வீரமரணம் அடைந்த அரியலூர் சிவசந்திரன், தூத்துக்குடி சுப்ரமணியன் ஆகியோருக்கு முதலமைச்சர் தலா 20 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளதுடன் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்பட நடிகர் அமிதாப்பச்சன், உயிர் தியாகம் செய்த 40 வீரர்களின் குடும்பத்தினருக்கு  தலா 5 லட்சம்  ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். இதே போல் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உயிர்தியாகம் செய்த இந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நாம் எது செய்தாலும் போதுமானதாக இருக்காது.


 
ஆனால் குறைந்தது என்னால் முடிந்த உதவியாக வீரமரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களை எனது பெயரில் உள்ள ‘ஷேவாக் சர்வதேச பள்ளி’யில் படிக்க வைக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இரானி கோப்பையை வென்றதன் மூலம் கிடைத்த பரிசுத்தொகையை, தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்குவதாக விதர்பா அணியின் கேப்டன் பைஸ் பாசல் அறிவித்து இருக்கிறார். 

இதே போல் அரியானா காவல்துறையில் பணியாற்றும் இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும், இதே போல் ஒவ்வொருவரும் ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

click me!