காமன்வெல்த் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் இறுதி போட்டியில் இங்கிலாந்தின் பென் லேன் - சீன் வெண்டி ஜோடியை வீழ்த்தி இந்தியாவின் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி தங்கம் வென்றது.
பர்மிங்காமில் நடந்துவரும் காமன்வெல்த் போட்டிகளின் கடைசி நாளிலும் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்துவருகின்றனர். கடைசி நாளான இன்று பேட்மிண்டனில் பி.வி.சிந்து மற்றும் லக்ஷ்யா சென் ஆகிய இருவரும் தங்கம் வென்றனர். டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சத்தியன் ஞானசேகரன் வெண்கலம் வென்றார்.
அதைத்தொடர்ந்து ஆடவர் இரட்டையர் பேட்மிண்டனில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் ஃபைனலில் இந்தியாவின் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி, இங்கிலாந்தின் பென் லேன் - சீன் வெண்டி ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 21-15 என வென்ற இந்திய ஜோடி, 2வது செட்டை 21-13 என வென்று வெற்றி பெற்று தங்கம் வென்றது. இது இந்த காமன்வெல்த்தில் இந்தியாவின் 21வது தங்கம் ஆகும்.