இரு கைகளில் இரு பியானோ, இரு இசை..! உலகையே வியக்கவைத்த தமிழன்.. யார் இந்த லிடியன் நாதஸ்வரம்..?

By karthikeyan VFirst Published Jul 28, 2022, 6:54 PM IST
Highlights

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் இரு கைகளிலும் இரு பியானோ, இரு இசைகளை வாசித்து உலகையே வியக்கவைத்த தமிழகத்தின் இளம் இசை கலைஞர் லிடியன் நாதஸ்வரம் யார் என்று பார்ப்போம்.
 

44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நடக்கிறது. நாளை முதல் போட்டிகள் தொடங்கும் நிலையில், இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் தொடக்க விழா நடந்துவருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள், பார்வையாளர்கள் என பல தரப்பினரும் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி செஸ் ஒலிம்பியாடை தொடங்கிவைக்கிறார்.

தொடக்க விழாவில் நடந்த கலைநிகழ்ச்சிகளில், தமிழகத்தை சேர்ந்த இளம் இசை கலைஞரான லிடியன் நாதஸ்வரம், ஒரே சமயத்தில் இரு கைகளிலும் இரு பியானோக்களை வாசித்து அரங்கில் குழுமியிருந்த வெளிநாட்டினரை வியப்பில் ஆழ்த்தினார். இரு கைகளிலும் இரு வேறு இசைகளை இசைத்ததுடன், கண்களை கட்டிக்கொண்டும் இசையமைத்து அசத்தினார்.

இன்று உலகமே வியந்து பார்க்கும் லிடியன் நாதஸ்வரம், ஏற்கனவே உலகை வியக்கவைத்தவர். யார் இந்த லிடியன் நாதஸ்வரம் என்று பார்ப்போம்.

தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் வர்ஷன் சதீஷ் என்பவரின் மகன் தான் லிடியன். இசை குடும்பத்தில் பிறந்ததால் இயல்பாகவே அவருக்கு இசை வந்தது. தனது 2வது வயதிலேயே சைலஃபோனை வாசிக்க ஆரம்பித்த லிடியனின் இசை திறமையை பார்த்த அவரது தந்தை அவருக்கு இசை கருவிகளை வாங்கி கொடுத்து வாசிக்க வைத்துள்ளார்.

சென்னையில் பிரபல பியானோ இசை கலைஞர் அகஸ்டியனிடம் முறையாக பியானோ கற்ற லிடியன், பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பள்ளியில் படித்தார். The World's Best என்ற சர்வதேச அளவிலான போட்டியில் அதிவேகமாக பியானோ வாசித்ததுடன், இரு பியானோக்களை ஒரே நேரத்தில் வாசித்து அசத்தினார். ஒரு நிமிடத்தில் 325 பீட்களை வாசித்து சாதனை படைத்தார்.

உலகையே தனது இசையால் வியக்கவும் மகிழவும் வைத்துவரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானையே வியக்கவைத்தார் இந்த சிறுவன் லிடியன். அவருக்கு சென்னையில் பாராட்டு விழா ஒன்றை நடத்தினார் ஏ.ஆர்.ரஹ்மான். ஏற்கனவே உலகை வியக்கவைத்த லிடியன் நாதஸ்வரம், இப்போது மீண்டும் சர்வதேசத்தை வியக்கவைத்துள்ளார்.
 

click me!