செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் இரு கைகளிலும் இருவேறு இசைகளை இசைத்து, தமிழனின் திறமையை உலகிற்கே பறைசாற்றினார் லிடியன் நாதஸ்வரம்.
44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் முதல் முறையாக இந்தியாவில் நடக்கிறது. அதுவும் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடப்பது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை.
186 நாடுகளை சேர்ந்த 2500 வீரர்கள், வீராங்கனைகள் இந்த செஸ் ஒலிம்பியாடில் கலந்துகொண்டு விளையாடுகின்றனர். செஸ் ஒலிம்பியாடை நடத்த கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி தமிழக அரசு, உலகமே வியக்குமளவிற்கு பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்துள்ளது.
மாமல்லபுரத்தில் நாளை முதல் செஸ் போட்டிகள் தொடங்கவுள்ளன. இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் தொடக்க விழா நடந்துவருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள், பார்வையாளர்கள் என பல தரப்பினர் கலந்துகொண்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி செஸ் ஒலிம்பியாட் தொடரை தொடங்கிவைக்கிறார்.
மாலை 5 மணிக்கே தொடங்கிவிட்ட தொடக்க விழாவில், அனைத்து அணிகளின் அறிமுக அணிவகுப்பு நடந்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவின் பன்முக தன்மையை பறைசாற்றும் வகையில், பாரம்பரிய நடனங்களை நடன கலைஞர்கள் அரங்கேற்றினர்.
அதைத்தொடர்ந்து பிரபல இளம் இசை கலைஞரான லிடியன் நாதஸ்வரம், பியானோ வாசித்து அசத்தினார். வழக்கம்போலவே தனது டிரேட்மார்க்கான வேகமாக பியானோ வாசிக்கும் திறமையை வெளிப்படுத்திய லிடியன் நாதஸ்வரம், அதன்பின்னர் இருகைகளிலும் இருவேறு இசைகளை இசைத்தார்.
ஒரு கையில் ஹாரி பாட்டர் மற்றும் மற்றொரு கையில் மிஷன் இம்பாசிபிள் ஆகிய திரைப்படங்களின் இசைகளை இசையமைக்க போவதாக அறிவித்த உடனேயே, வெளிநாட்டினர் எல்லாம் மிரண்டுவிட்டனர். பின்னர் அவர் இரு கைகளிலும் இருவேறு இசையை, தனக்கே உரிய வேகத்துடன் மிரட்டலாக வாசித்ததும், அதைக்கண்டு வெளிநாட்டினர் அனைவரும் வியந்துபோனார்கள்.
தமிழனின் திறமையை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மேடையில் உலகறிய செய்து, தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார் லிடியன் நாதஸ்வரம். அதன்பின்னரும் தொடர்ந்து தொடர்ச்சியாக பியானோ வாசித்து அனைவரையும் எண்டர்டெய்ன் செய்தார்.