இதுதாங்க கேப்டன் தோனியின் ஸ்பெஷல்!!

First Published Apr 23, 2018, 2:53 PM IST
Highlights
chahar praised dhoni captaincy


கூட்டணியை உடைத்து வெற்றியை பெறுவதே தோனியின் கேப்டன்ஷிப்பின் தனித்தன்மை என சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சாஹர் தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி திரில் வெற்றி பெற்றது.

ஹைதராபாத்தில் நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, அம்பாதி ராயுடுவின் அதிரடியால், 182 ரன்களை குவித்தது. 183 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி, 178 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய வில்லியம்சன் பதான் இணையை உடைத்ததே சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்டது. வெற்றியை நெருங்கும் நேரத்தில் கடைசி ஓவரில் மிரட்டிய ரஷீத் கானை கட்டுப்படுத்தி கடைசி பந்தில் சென்னை திரில் வெற்றி பெற்றது. இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 3 போட்டிகளில் கடைசி ஓவரில் சென்னை அணி திரில் வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டிக்கு பிறகு பேசிய வேகப்பந்து வீச்சாளர் சாஹர், அணி இக்கட்டான சூழலில் இருக்கும் போது வெற்றிபெற வைப்பது எல்லாம் கேப்டன் தோனிதான். இந்த போட்டியின் வெற்றிக்கு பின்பும் தோனிதான் இருக்கிறார். இந்த வெற்றியை நினைத்து பெருமைப்படுகிறோம் என்றாலும் அதற்கு தோனியே காரணம்.

இக்கட்டான தருணங்களில் பந்துவீச்சாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் போது, அவரின் ஆலோசனை எங்களுக்கு மிக உதவியாக இருக்கும். இந்தப் போட்டியில் யூசுப் பதானும், கேன் வில்லியம்சனும் நல்ல பாட்னர்ஷிப் அமைத்து ரன்களைச் சேர்த்து வந்தனர்.

அவர்களைப் பிரிக்க முடியாமல் சிரமப்பட்டபோது, தோனிதான் சில ஆலோசனைகள் அளித்து பந்துவீசச் சொன்னார். தோனியின் ஆலோசனைக்கு ஏற்ப தாகூரும் பிராவோவும் பந்து வீசி அந்த கூட்டணியை உடைத்தனர். எதிரணியின் கூட்டணியை உடைப்பதும், வெற்றியைப் பெறுவதும் தோனியின் கேப்டன்ஷிப்பின் தனித்தன்மையாகும் என சாஹர் தெரிவித்தார்.
 

click me!