
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கௌரவத்தை தக்கவைத்துக் கொண்டது இந்தியா.
பெங்களூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. 71.2 ஓவர்களில் 189 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 9 பவுண்டரிகளுடன் 90 ஓட்டங்கள் அடித்திருந்தார்.
ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் 8 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 122.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 276 ஓட்டங்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக மட் ரென்ஷா 60, ஷான் மார்ஷ் 66 ஓட்டங்கள் எடுத்தனர்.
இந்தியத் தரப்பில் ஜடேஜா 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 87 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 72 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
புஜாரா 79, ரஹானே 40 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து, நேற்று நடைபெற்ற 4-ஆவது நாள் ஆட்டத்தில் ரஹானே அரைசதம் கடந்து 52 ஓட்டங்களுக்கு பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த கருண் நாயர் டக் அவுட் ஆனார்.
அவரைத் தொடர்ந்து களத்துக்கு வந்த விருத்திமான் சாஹா சற்று நிலைக்க, மறுமுனையில் 7 பவுண்டரிகளுடன் 92 ஓட்டங்கள் எடுத்திருந்த புஜாரா ஹேஸில்வுட் பந்துவீச்சில் மார்ஷிடம் கேட்ச் ஆனார்.
அடுத்து வந்த அஸ்வின் 4, உமேஷ் யாதவ் 1, இஷாந்த் சர்மா 6 ஓட்டங்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 97.1 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 274 ஓட்டங்கள் எடுத்தது இந்தியா. சாஹா 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆஸ்திரேலிய தரப்பில் ஹேஸில்வுட் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 188 ஓட்டங்கள் இலக்குடன் 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய ஆஸ்திரேலியாவில் ஸ்டீவன் ஸ்மித் (28), ஹேண்ட்ஸ்காம்ப் (24) மட்டும் அணிக்கு ஓட்டங்கள் சேர்க்க உதவினர்.
டேவிட் வார்னர் 17, மிட்செல் மார்ஷ் 13 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இதர வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தனர். இறுதியாக 35.4 ஓவர்களில் 112 ஓட்டங்களுக்கு சுருண்டது
ஆஸ்திரேலியா. அஸ்வின் 6, உமேஷ் யாதவ் 2, இஷாந்த் சர்மா, ஜடேஜா தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகனாக கே.எல்.ராகுல் அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் தற்போது சமன் செய்துள்ளது இந்திய அணி.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.