பஞ்சாப் போட்டியில் பந்தை தூக்கி எறிந்து விளையாடிய ஜடேஜா, பிராவோ!! கேப்டன் கூல், சூடான சம்பவம்

First Published May 21, 2018, 11:48 AM IST
Highlights
captain cool dhoni got tension due to over threw


கேப்டன் கூல் என புகழப்படும் சென்னை அணியின் கேப்டன் தோனி, இந்த ஐபிஎல் சீசனில் சில தருணங்களில் சூடானார். பஞ்சாப்புக்கு எதிரான போட்டியிலும் அப்படியொரு சம்பவம் நடந்தது. 

ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

கடைசி லீக் போட்டி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே புனே மைதானத்தில் நேற்றிரவு 8 மணிக்கு நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பவுலிங் தேர்வு செய்ததால், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 19.4 ஓவருக்கு 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 19.1 ஓவரில் இலக்கை எட்டி சென்னை அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில், பஞ்சாப் அணி பேட்டிங்கின் போது, கூல் தோனியை ஜடேஜாவும் பிராவோவும் இணைந்து டென்ஷனாக்கிவிட்டனர். பஞ்சாப் அணிக்கு 8வது ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தை திவாரி அடிக்க, பந்து ஜடேஜாவிடம் சென்றது. திவாரியும் மில்லரும் ரன் ஓடினர். அந்த பந்தை பிடித்த ஜடேஜா, ரன் அவுட் ஆக்கும் முனைப்பில் வீச, பந்து ஸ்டம்பில் படாமல், பிராவோவிடம் சென்றது. அதற்குள் பேட்ஸ்மேன்கள் இருவரும் மற்றொரு ரன் ஓட, பிராவோவும் ரன் அவுட் ஆக்கும் முனைப்பில் பந்தை வீசினார். அந்த பந்தை தோனியும் ராயுடுவும் விட்டுவிட, பிராவோ வீசிய பந்து பில்லிங்ஸிடம் சென்றது. அதனால் திவாரியும் மில்லரும் மீண்டும் ஒரு ரன் ஓடினர். 

பிராவோ வீசிய பந்தை பிடித்த பில்லிங்ஸ், தாகூரிடம் வீசினார். ஒரு வழியாக அவர்களின் த்ரோ விளையாட்டு முடிவுக்கு வந்தது. ஆனால் திவாரியும் மில்லரும் 3 ரன்கள் ஓடிவிட்டனர். ஒரு ரன்னுட்டன் நிற்கவேண்டிய இடத்தில், தேவையில்லாத ஓவர் த்ரோவால் 2 ரன்கள் கூடுதலாக எடுத்தனர். அதனால் கேப்டன் கூல் தோனி, சற்று கடுப்பானார்.

இந்த சீசன் முழுவதுமே கேப்டன் கூல் தோனியை அந்த அணி வீரர்கள் கூலாக இருக்கவிடவில்லை. கடைசி ஓவர்களில் சொதப்பல் பவுலிங், சொதப்பலான ஃபீல்டிங் என தோனியை டென்ஷாக்கி கொண்டே இருக்கின்றனர். சற்று கடுப்பானாலும் கேப்டன் கூல், அதை வெளிக்காட்டாமல், உடனடியாக கூலாகி, அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றியை பறித்துவிடுகிறார்.
 

click me!