ஐபிஎல்லில் ஆடுவாரா பும்ரா..? மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் அதிர்ச்சி

By karthikeyan VFirst Published Dec 31, 2018, 11:28 AM IST
Highlights

உலக கோப்பையை கருத்தில்கொண்டு பும்ராவின் வேலைப்பளுவை குறைக்கும் விதமாக ஐபிஎல்லில் அவர் ஆடுவது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பிசிசிஐ சார்பில் பேச்சு நடத்தப்பட உள்ளது. 
 

உலக கோப்பையை கருத்தில்கொண்டு பும்ராவின் வேலைப்பளுவை குறைக்கும் விதமாக ஐபிஎல்லில் அவர் ஆடுவது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பிசிசிஐ சார்பில் பேச்சு நடத்தப்பட உள்ளது. 

இந்திய அணியின் நட்சத்திர பவுலராக பும்ரா திகழ்கிறார். இந்திய பவுலிங்கின் விராட் கோலி, பும்ரா என்று ஆகாஷ் சோப்ரா அண்மையில் புகழ்ந்துள்ளார். அந்தளவிற்கு இந்திய அணியின் அசைக்கமுடியாத சக்தியாக திகழ்கிறார் பும்ரா. 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான பும்ரா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய தொடர்களில் ஆடி இந்த ஆண்டில் மட்டும் 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர பவுலராக திகழ்வதால் அவரது பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் முக்கியம் என்பதால் அவருக்கு போதுமான ஓய்வு அவ்வப்போது அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான பும்ரா, 9 போட்டிகளில் ஆடி 380 ஓவர்களை வீசியுள்ளார். 2019 மே மாத இறுதியில் உலக கோப்பை தொடங்க இருப்பதால், உலக கோப்பையில் பும்ராவின் பங்களிப்பு மிகவும் முக்கியம். அதனால் காயமடைந்துவிடாமல் உடற்தகுதியுடன் இருக்க வேண்டியது அவசியம். அதனால் அவருக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய ஒருநாள் தொடர்களிலிருந்து ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதேபோல ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடும் பும்ராவிற்கு, முக்கியமான போட்டிகளை தவிர மற்ற போட்டிகளில் ஓய்வு அளிக்கப்படுவது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்துடன் பிசிசிஐ சார்பில் பேச்சு நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உலக கோப்பையில் ஆடும் இந்திய பவுலர்கள் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு ஐபிஎல்லில் இருந்து ஓய்வு அளிக்க வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் கோலி ஏற்கனவே பிசிசிஐ-யிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த மும்பை இந்தியன்ஸ் கேப்டனும் இந்திய அணியின் துணை கேப்டனுமான ரோஹித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் பவுலரான பும்ரா ஐபிஎல்லில் ஆடுவார் என்று கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

click me!