
"கோபா சுடமெரிக்கானா' கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காகச் சென்றபோது விமான விபத்தில் உயிரிழந்த பிரேசில் நாட்டு கிளப் கால்பந்து அணிக்கு அந்தப் போட்டியின் சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
கோபா சுடமெரிக்கானா கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டம் கொலம்பியாவில் கடந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதில் கொலம்பிய கிளப் அணியான அட்லெடிகோ நேஷனல் - பிரேசில் கிளப் அணியான சாபேகோயென்ஸ் ஆகியவை மோதுவதாக இருந்தது.
அதில் பங்கேற்பதற்காக பிரேசில் வீரர்கள் சா பவுலோ நகரில் இருந்து நவம்பர் 28-ஆம் தேதி தனி விமானத்தில் புறப்பட்டனர். கொலம்பியா நோக்கிச் செல்லும்போது விமானத்தில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக வழியில் மலை ஒன்றில் மோதி அந்த விமானம் விபத்துக்குள்ளானது.
இதில் கால்பந்து வீரர்கள், விமான சிப்பந்திகள் என 76 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தை அடுத்து, கோபா சுடமெரிக்கானா கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக தென்னமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு அறிவித்தது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த சாபேகோயென்ஸ் அணிக்கு "கோபா சுடமெரிக்கானா' பட்டத்தை வழங்குமாறு, இறுதிப் போட்டியில் அதனுடன் மோதவிருந்த அட்லெடிகோ நேஷனல் அணி கோரிக்கை விடுத்தது.
இதனை ஏற்ற போட்டி அமைப்பாளர்களான தென்னமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு, "கோபா சுடமெரிக்கானா' சாம்பியன்ஷிப் பட்டத்தை உயிரிழந்த சாபேகோயென்ஸ் அணிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.